போபால்: மத்தியப்பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் குடிநீருக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டிருப்பதால் பெண்கள் புகுந்த வீட்டை கைவிட்டு பிறந்த வீட்டிற்கே சென்றுவிடும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். மத்தியப்பிரதேசத்தில் உள்ள பர்வானி என்ற கிராமத்தில் கடும் வெயில் காரணமாக வறட்சி தாண்டவமாடுகிறது. கிராமத்தில் உள்ள கிணறுகள், நீர் நிலைகள் வற்றிவிட்டதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு குடம் நீருக்காக தினமும் சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டிருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் தங்களுடைய கிராமத்தை சேர்ந்த ஆண்களுக்கு பெண் தர அண்டை கிராமத்தினர் மறுப்பு தெரிவிப்பதாக கூறும் ஊர் பெரியவர்கள், திருமணமான பெண்கள் கூட தண்ணீருக்கான போராட்டத்தை தாங்க முடியாமல் பிறந்த வீட்டிற்கே திரும்பி விடுவதாக கூறுகின்றனர். ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் 10க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தண்ணீர் பிரச்னை எதிரொலியாக கிராமத்தை விட்டு சென்றுவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் மத்தியப்பிரதேச அரசு தங்கள் கிராமத்திற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.