ராகுல் காந்தியை பெரிதும் மதித்த இந்திரா காந்தி: புதிய புத்தகத்தில் சுவாரசிய தகவல்கள்

புதுடெல்லி :

பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ரஷீத் கித்வாய் ‘தலைவர்கள், ஆளுமைகள், குடிமக்கள்’ என்ற தலைப்பில் இந்திய அரசியலில் செல்வாக்கு பெற்ற 50 ஆளுமைகளைப்பற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.

‘ஹாசெட் இந்தியா’ பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் சுவாரசியமான தகவல்கள் பல இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகத்தில் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட நாளில் நடந்த சம்பவங்கள் நினைவுகூரப்பட்டுள்ளன.

1984, அக்டோபர் 31-ந் தேதி அன்று பேரக்குழந்தைகள் பிரியங்கா, ராகுல் இருவரும் பள்ளிக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன் இந்திரா காந்தி அவர்களுக்கு அன்பு முத்தம் தந்திருக்கிறார். அப்போது 12 வயதாக இருந்த பிரியங்கா, வழக்கத்தை விட தன்னை பாட்டி அதிக நேரம் வைத்திருந்ததை பின்னர் நினைவு கூர்ந்தார் என நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திரா காந்தி மனதில் மரணம் பற்றிய எண்ணம் இருந்து கொண்டே இருந்ததாம். தனது மரணத்தின்போது ராகுல் காந்தி அழக்கூடாது, பொறுப்பை ஏற்க வேண்டும் என்று இந்திரா காந்தி கூறி இருந்தார். இது முதல் முறையல்ல. இதற்கு பல நாட்கள் முன்பாகவே கூட ராகுலிடம் இந்திரா காந்தி தனது இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் பற்றி கூறி விட்டார் எனவும் நூலாசிரியர் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக ரஷீத் கித்வாய் இப்படி எழுதி இருக்கிறார்:-

இந்திரா காந்தி, ஆளுமையின் மதிநுட்பம் மிகுந்த நீதிபதியாக பார்க்கப்படுகிறார். அவர் ராகுல் காந்தியின் மன உறுதி மற்றும் உறுதிப்பாட்டை மதிப்பவராக இருந்தார். அவருக்கு வெறும் 14 வயதுதான் என்றபோதும்கூட, அவரது தந்தை, தாயான ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோரிடம் பேசுவதற்கு தவிர்க்கும் விஷயங்களைக்கூட நம்பி பேசுகிற மனமுதிர்ச்சி பெற்ற நபராக ராகுல் காந்தியைக் கருதினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தில் ஷேக் அப்துல்லா, ராஜீவ் காந்தி, அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி, வாஜ்பாய் ஆகியோரைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.