சென்னை: சென்னையில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.1.56 கோடி செலவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொள்ளவுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 26-ம் தேதி 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திருவாரூரில் முத்துவேலர்-அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப்படும் என்பதை இம்மாமன்றத்தில் நெஞ்சில் விம்மக்கூடிய மகிழ்ச்சியால், இதயத்தில் துடிக்கக்கூடிய எழுச்சியால், சிந்தை அணுக்களில் வெளிப்படும் நன்றி உணர்வால் நான் இதை இந்த அவைக்கு அறிவிக்கிறேன்.
வரும் ஜூன் 3 அன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும் என்பதையும் அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன். ‘நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக உயரம் தாண்ட முடியும்” என்று அடிக்கடிச் சொல்வார் தலைவர் கலைஞர். நீண்ட தூரம் இந்த தமிழினத்துக்காக ஓடியவர் கலைஞர். அவரை அதிக அதிக உயரத்தில் உயர்த்திப் பார்ப்பதைத் தனது கடமையாகக் கருதுகிறது தமிழக அரசு” என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இந்த சிலை அமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி 1.56 கோடி செலவில் இந்த சிலை அமைய உள்ளது. இதன்படி அடுத்த ஒரு மாதத்திற்குள் இதை நிறுவதற்கான பணி தொடங்கும் என்று பொதுப்பணித்துறை சார்பில் தெரிவித்துக்கப்பட்டுள்ளது.