30.4.2022
22:30: உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு, நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து தீவிரமாக செயல்பட விரும்புவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் கூறியிருக்கிறார். ராணுவ தளவாடங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மேக்ரான் உறுதி அளித்துள்ளார்.
21:00: உக்ரைனின் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தி வரும் ரஷிய படைகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஏராளமான தானியங்களைக் கைப்பற்றுவதாக உக்ரைன் விவசாயத்துறை மந்திரி டாரஸ் பிசோட்ஸ்கி தெரிவித்தார். ஜபோரிஜியா, கெர்சன், டோனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் இருந்து பல லட்சம் டன் தானியங்கள் எடுக்கப்பட்டதாக, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்ததாக அவர் கூறினார்.
20:30: கண்ணிவெடிகளை கண்டறிந்து பாதுகாப்பாக அகற்றுவது எப்படி? என்பது தொடர்பாக உக்ரைனைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் மிஞ்சுகோவா உள்ளிட்ட 5 பெண்கள், கொசோவா நாட்டில் பயிற்சி பெற்று வருகின்றனர். உக்ரைனில் நடைபெற்று வரும் போர் முடிவுக்கு வந்தபின், அங்கு வெடிக்காமல் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபடுவார்கள்.
20:00: போர் தொடங்கியதில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களை ரஷியா வெளியேற்றியுள்ளதாக ரஷியாவின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
19:30: உக்ரைனில் உள்ள ரஷியப் படைகளின் மன வலிமை குறைந்திருப்பதாக பிரிட்டன் ராணுவம் கூறி உள்ளது.
15:30: ரஷியா மீதான மேற்கத்திய நாடுகளின் தடைகளை நீக்குவது சமாதான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதி என்றும், இது கடினமானது என்றும் ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறி உள்ளார்.
14:30: கார்கிவ் அருகே உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கிராமமான ருஸ்கா லோசோவாவை மீண்டும் கைப்பற்றியதாகவும், அங்கிருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்களை வெளியேற்றியதாகவும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.
13:00: உக்ரைனில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 389 இடங்களை ஒரே இரவில் தாக்கியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
12:00: தலைநகர் கீவ் அருகே உள்ள பகுதிகளில் ரஷிய படைகள் அட்டூழியங்கள் செய்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இதனை ரஷியா மறுத்துள்ளது.
11:30: உக்ரைனுக்கு நேட்டோ அளித்து வரும் ஆதரவுக் குரல், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசியல் ஒப்பந்தத்தை எட்டுவதற்குத் தடையாக உள்ளது என்று ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்லோவ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
03.20: உக்ரைனில் ரஷிய படை தாக்குதலின் போது அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டது வருத்தமளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதனிடையே, உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தும் என அமெரிக்கா நம்பவில்லை என்று, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
02.50: கீவ் பகுதியில் 900 பேர் புதைக்கப்பட்டிப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சுமார் 5,00,000 உக்ரேனியர்கள் சட்டவிரோதமாக ரஷியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று போலந்து ஊடகத்திடம் அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
01.40: ஐ.நா.பொதுச் செயலாளர் உக்ரைன் வந்திருந்தபோது கீவ் நகரின் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியதாக ரஷியா உறுதிபடுத்தி உள்ளது. நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் மூலம் உக்ரைன் விண்வெளி நிறுவனங்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
12.30: மரியுபோல் நகரில் போரினால் பாதிக்கப்பட்ட அடுக்குமாடி கட்டிட இடிபாடுகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் பணியில் ஐ.நா.சபை ஊழியர்கள் ஈடுபட்டனர். அங்குள்ள எஃகு உற்பத்தி ஆலையின் உள்ளே நிலைமை மோசமாக உள்ளது என்றும், அங்கே பதுங்கியுள்ளவர்கள் காப்பாற்றுமாறு கெஞ்சுவதாகவும் மரியுபோல் மேயர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் ரஷிய படைகளின் முன்னேற்றத்தை தடுக்க உக்ரைனின் படைகள் தீவிரமாக போராடி வருகிறது. சில நகரங்களில் பீரங்கித் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
29.4.2022
20.45: உக்ரைன் ரஷியா இடையில் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் புகைப்படத்தை டைம் இதழ் தனது அட்டை படத்தில் வெளியிட்டுள்ளது. அதில் போர் நடந்து வரும் சூழ்நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனை எப்படி வழிநடத்துகிறார் என்ற வரிகளுடன் டைம் வார இதழ் வெளியிட்டுள்ளது.
14.50: உக்ரைனில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் நாட்டை சேர்ந்த இரண்டு தன்னார்வலர்கள் ரஷ்ய இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரையும் கண்டுபிடித்து மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
03.40: உக்ரைன் கீவ் நகரில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது ஐ.நா.சபையை அவமதிக்கும் செயல் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐ.நா.பொதுச் செயலாளர் வருகை தந்துள்ள நிலையில், கீவ் பகுதி மீது ஐந்து ஏவுகணைகள் பறந்து வந்து தாக்கியதாகவும், இது ஐ.நா.அமைப்பு உள்பட அனைத்து பிரதிநிதித்துவத்தையும் அவமானப்படுத்தும் ரஷிய தலைமையின் முயற்சி என்றும் தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
02.20: உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகள் மீது ரஷிய படைகள் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளன. இதில் ஒருவர் கொல்லப் பட்டார். பலர் படுகாயம் அடைந்தனர். மேலும் இரண்டு கட்டிடங்கள் சேதடைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் சென்றுள்ள ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், அந்நாட்டு அதிபருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ஒரு மணி நேரத்திற்கு பின்பு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
01.40: ரஷ்யா, தான் ஆக்கிரமித்துள்ள பகுதியில் இருந்து தானியங்களைத் திருடியதாக உக்ரைன் குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து பயிர்களை ரஷிய படைகள் அபகரித்துள்ளதாகவும், தானியங்களை திருடியதாகவும்தெரிவிக்கப் பட்டுள்ளது. உக்ரைன் இந்த குற்றச்சாட்டிற்கு ரஷியா எந்த பதிலும் அளிக்கவில்லை.
12.30: ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தோல்வி அடைந்து விட்டதாக அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் சென்றுள்ள அவர், தலைநகர் கீவ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். இருநாடுகள் இடையே போரை தடுக்கவும், அதை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், அனைத்து முயற்சிகளையும் செய்ய தவறி விட்டது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.