திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகேயுள்ள பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம். சி.ஆர்.பி.எப் வீரரான இவர் தற்போது காஷ்மீரில் பணியில் உள்ளார். இவரின் மனைவி கலைவாணி கடந்த 27-ம் தேதி இரவு வீட்டில் தனது மாமியார், மாமனார், தனது 10 மாத பெண் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது நள்ளிரவு சுமார் 1 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், கலைவாணி முகத்தை துணியால் மூடி அவர் அணிந்திருந்த எட்டரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதில் கழுத்தில் காயம் ஏற்பட்டு கலைவாணி அலற, உடனே குடும்பத்தார் அவரை முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து ஜெம்புநாதபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கலைவாணியின் கணவர் நீலமேகம், “நான் காஷ்மீர்ல டியூட்டியில இருக்கேன். எங்களது வீட்டுக்கே பாதுகாப்பு இல்லாத போது எப்படி எங்களால் ராணுவத்தில் நிம்மதியாக டியூட்டி பார்க்க முடியும். டி.ஜி.பி சைலேந்திர பாபு ஐயா இந்த வீடியோவை பார்த்து குற்றவாளிகளை உடனே பிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்துப் பேசி வெளியிட்ட வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலானது. இது தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு கவனத்திற்குச் சென்றதும் உடனடியாக கலைவாணி மற்றும் நீலமேகத்தை ஃபோன் மூலமாகத் தொடர்பு கொண்டு ஆறுதலாகப் பேசியதோடு, சிறப்பு தனிப்படைகள் அமைத்து விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றிருக்கிறார்.
அதன்படி திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி பாலகிருஷ்ணன் மற்றும் திருச்சி எஸ்.பி சுஜித்குமார் ஆகிய இருவரும் ஜெம்புநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரித்ததோடு, மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த கலைவாணியையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக 8 பேர் கொண்ட சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. வழக்கின் விசாரணை குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். “சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரை பிடித்து விசாரித்தோம். அவர்களிடம் பெரிதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. நிச்சயமாக இதை லோக்கல் ஆட்கள் தான் செய்திருக்க வேண்டும். அல்லது லோக்கல் ஆட்களின் உதவியுடன் இதை அரங்கேற்றியிருக்கக் கூடும். குற்றவாளி இவராகத் தான் இருக்குமென ஒருவரை நெருங்கியிருக்கிறோம். அவரைத் தேடி தான் அலைந்து கொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம்” என்றனர்.