பெங்களூரு: பிரபல மொபைல் நிறுவனமான “ஸியோமி”-யின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியது. சீனாவை சேர்ந்த பிரபல செல்போன் நிறுவனமான ஸியோமிக்கு சொந்தமான சுமார் ரூ.5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸியோமி மட்டுமல்லாமல் oppo உள்ளிட்ட 3 செல்போன் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கடந்த டிசம்பர் மாதம், அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும், நிறுவனங்களுக்கு தொடர்புடைய நபர்களின் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனையை நடத்தியது. அதில் நிறுவனமானது பலகோடி ரூபாய் வரி ஏய்ப்பினை செய்துள்ளது தெரியவந்தது. மேலும் அந்நியசெலாவணி முறைகேடும் நடைபெற்றள்ளதாக வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 13-ம் தேதி ஸியோமி நிறுவனத்தின் முன்னாள் இந்திய நிர்வாக இயக்குநருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் 1999-ம் ஆண்டின் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் சீனாவை சேர்ந்த ஸியோமி டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட்-க்கு சொந்தமான சுமார் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்நிறுவனத்தின் பல்வேறு வணிக நடைமுறைகள், இந்தியாவின் அந்நிய செலாவணி சட்டத்திற்கு உட்பட்டு இருக்கிறதா? என்பது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும் படியும், ஏற்கெனவே அந்நிறுவனங்களை சார்ந்த அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் ஒன்றையும் கொடுத்துள்ளது. இந்த விசாரணை நடைபெறும் சூழலில் இந்நடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது.