வாட்டி வதைக்கும் வெப்பம், அடுத்த 5 நாட்களுக்கு குறைய வாய்ப்பில்லை: இந்திய வானிலை ஆய்வுத்துறை தகவல்

புதுடெல்லி: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை குறைய வாய்ப்பில்லை என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் ஒருபுறம் அச்சுறுத்தி வரும் வேளையில், மறுபுறம் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் வெப்ப நிலை 45 டிகிரியை கடந்ததால் கடும் அனல் காற்று வீசியது.

குருகிராமில் நேற்று முன்தினம் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவாக 45.6 டிகிரி செல்சியஸை தொட்டது. இதற்கு முன் கடந்த 1979, ஏப்ரல் 28-ல் 43.7 டிகிரி செல்சியஸ் என்பதே இங்கு அதிகபட்ச வெப்பநிலையாக இருந்தது.

தலைநகர் டெல்லியில் ஏப்ரல் மாதத்தில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவாக நேற்று முன்தினம் 43.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. இதுபோல் உ.பி.யில் அலகாபாத் (45.9 டிகிரி), ம.பி.யில் கஜுராஹோ, நவ்காங் (45.6) மகாராஷ்டிராவில் ஜல்காவோன் (45.6), ஜார்க்கண்டில் டால்டோங்கஞ்ச் (45.8) உள்ளிட்ட நகரங்களில் கடுமையான வெயில் சுட்டெரித்தது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கும் கிழக்கு இந்தியாவில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் அனல் காற்று நீடிக்கும். வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 2 டிகிரி செல்சியல் உயர வாய்ப்புள்ளது” என்று எச்சரித்துள்ளது.

மேலும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிகளுக்கு அடுத்த 4 நாட்களுக்கு ஐஎம்டி, ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் வடமேற்கு இந்தியாவில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் என வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வானிலை ஆர்வலர் நவ்நீத் தாஹியா கூறும்போது, “ஏப்ரல் இறுதியில் ராஜஸ்தானில் சுரு, பார்மர், பிகானீர், ஸ்ரீ கங்காநகர் போன்ற இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி என்பது இயல்பானது. ஆனால் வட இந்திய சமவெளிப் பகுதிகளில் தற்போதைய 45-46 டிகிரி செல்சியல் வழக்கத்துக்கு மாறானது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.