லக்னோ: உத்தர பிரதேசத்தின் வாரணாசி யில் புகழ்பெற்ற விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதி இடிக்கப் பட்டு, மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மசூதியை இந்துக்களிடம் ஒப்படைக்க கோரி 1991-ல் வாரணாசி நீதிமன்றத் தில் துறவிகள் தொடுத்த வழக்கு இன்னும் தொடர்கிறது.. இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி வாரணாசி நீதி மன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே வாரணாசி நீதிமன்றத்தின் சில உத்தரவு களை எதிர்த்து கியான்வாபி மசூதியை நிர்வகிக்கும் சன்னி வக்பு வாரியம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது சன்னி வக்பு வாரியம் கூறும் போது, “கியான்வாபி மசூதிகட்டுவதற்காக சட்டப்பூர்வ நன்கொடையாளர் ஒருவர், நிலத்தை வழங்கியுள்ளார். இந்த நிலம் வக்புவாரியத்துக்கு சொந்த மானது” என்று வாதிடப்பட்டது.
விஸ்வநாதர் கோயில் தரப்பு வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி கூறும்போது, “கடந்த 1669-ம் ஆண்டில் காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டது. அந்தஇடத்தில்தான் மசூதி கட்டப்பட்டிருக்கிறது. மசூதி அமைந்துள்ள நிலம் சன்னி வக்பு வாரியத்துக்கு சொந்தமானது கிடையாது” என்றுவாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிரகாஷ் பாடியா மே 10-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். -பிடிஐ