10 மாநில ஆளுநர்களின் பதவியை பிடிக்க பாஜவில் போட்டா போட்டி: 2024 மக்களவை தேர்தலை மையப்படுத்தி பட்டியல் தயாரிப்பு

புதுடெல்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் கிட்டத்தட்ட 10 மாநில ஆளுநர்கள் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதால், அந்த பதவியை பிடிக்க பாஜகவில் போட்டாபோட்டி நிலவுகிறது. வரும் 2024 மக்களவை தேர்தலை மையப்படுத்தி பட்டியல் தயாரிக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது. மேகாலயா, அசாம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள், அந்தமான் மற்றும் நிகோபார் துணைநிலை ஆளுநர்களின் பதவிக்காலம் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் முடிவடைகிறது. அதாவது அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முகி, அருணாச்சல ஆளுநர் பி.டி.மிஸ்ரா, சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத், அந்தமான் நிகோபார் லெப்டினன்ட் கவர்னர் டி.கே.ஜோஷி ஆகியோரின் பதவிக்காலம் அக்டோபரில் முடிவடைகிறது. மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்கின் பதவிக்காலம் வரும் செப்டம்பரில் முடிவடைகிறது. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக உள்ளார். அந்தப் பதவியும் காலியாக உள்ளது. மேலும் பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோகித் மற்றும் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவவ்ரத் ஆகியோரின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், அவர்கள் இரண்டாவது முறையாக ஆளுநர் பதவியை வகித்து வருகின்றனர். அதேபோல் டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜாலின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதால், இரண்டாவது முறையாக பணியாற்றி வருகிறார். மேகாலயா கவர்னர் சத்ய பால் மாலிக், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிற பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக ஒன்றிய அரசையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.அதனால் அவர் பதவியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அவர் தனது பதவிக்காலம் முழுவதும் இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலின் போது அப்போதைய பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதனால் இந்த முறையும் பல ஆளுநர்களின் பெயர்கள் குடியரசு தலைவர் வேட்பாளர் பட்டியலில் இருப்பதாக ஊகங்கள் எழுந்துள்ளன. எவ்வாறாயினும், இம்முறை குடியரசு தலைவர் தேர்தலுக்காக அணுகுமுறை வித்தியாசமானதாக இருக்கும் என்று குடியரசுத் தலைவர் மற்றும் துணைக்  குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த உடனேயே, ஆளுநர்கள் காலிப்  பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த 5 மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. அது, 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மையப்படுத்தியதாக இருக்கும் என்கின்றனர். இதுகுறித்து டெல்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், ‘குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ளது. அவருக்குப் பின் அந்த இடத்தில் யாரை அமரவைக்கலாம் என்ற விவாதம் பாஜக உயர்மட்டத்தில் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் தேர்தலும் நடைபெறவுள்ளதால், அதற்கான வேட்பாளர் தேர்வும் ரகசியமாக நடைபெற்று வருகிறது. 5 மாநில ஆளுநர்களின் பதவிகாலம் செப்டம்பர், அக்டோபரில் முடிவடைகிறது. இரண்டாவது பதவிகாலத்தில் 2 ஆளுநர்களும், ஒரு லெப்டினன்ட் கவர்னரும் உள்ளனர். ஒருவர் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியை கவனித்து வருகிறார். ஒரு ஆளுநர் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதனால் புதிய ஆளுநர்கள் நியமித்தல், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், டெல்லி போன்ற மாநிலங்களில் ஏற்படும் அரசியல் மற்றும் நிர்வாக குழப்பங்களை தவிர்ப்பதற்காக சுமூகமான ஆளுநர்களை நியமித்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர், துணை தலைவர் தேர்தலுக்கு பின்னர், கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆளுநர் பதவிக்கு போட்டியிடும் பாஜக மூத்த தலைவர்கள் பட்டியலில் கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவும் ஒருவர். கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், கர்நாடகாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், லிங்காயத் சமூகத்தினருக்கான வாக்குகளை அள்ளவும் பாஜக திட்டமிட்டு வருகிறது. அதேபோல் இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் மற்றும் பீகார் மூத்த தலைவர் சிபி தாக்கூர் ஆகியோரின் பெயர்களும் ஆளுநர் பட்டியலில் உள்ளனர். அதேபோல் தென்மாநிலங்களை சேர்ந்த பிரபலங்களின் பெயர்களும் அடிபடுகின்றன’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.