புதுடில்லி : நம் ராணுவ தலைமை தளபதியாக பணியாற்றிய ஜெனரல் எம்.எம்.நரவானே நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, நாட்டின் 29வது தலைமை தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று பதவியேற்றார்.
ராணுவ தலைமை தளபதி நரவானே நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, புதிய தலைமை தளபதியாக, துணை தளபதியாக இருந்த மனோஜ் பாண்டே, நேற்று நடந்த நிகழ்ச்சியில் பொறுப்பேற்றார்.பிப்., 1ல் துணை தளபதியாக நியமிக்கப்பட்ட மனோஜ் பாண்டே, அதற்கு முன் கிழக்கு பிராந்திய தளபதியாக பணியாற்றினார். ராணுவத்தின் பொறியியல் பிரிவைச் சேர்ந்த ஒருவர், தலைமை தளபதியாக நியமிக்கப்படுவது
இதுவே முதல் முறை. கடந்த 1982ல், தேசிய ராணுவ அகாடமியில் பயிற்சியை முடித்த அவர், ராணுவத்தின் பொறியியல் பிரிவில் நியமிக்கப்பட்டார்.முப்படைகளும் இணைந்த ஒரே பிரிவான, அந்தமான் – நிகோபர் படைப் பிரிவின் தளபதி உட்பட பல பதவிகளை, ஜெனரல் மனோஜ் பாண்டே வகித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் பணியாற்றியுள்ள அவர், பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
நாட்டின் முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பணியாற்றிய ஜெனரல் பிபின் ராவத், தமிழகத்தின் குன்னுாரில் கடந்தாண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அந்தப் பதவிக்கு, ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்து நேற்று ஓய்வு பெற்ற ஜெனரல் நரவானே நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement