லண்டன்: ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நாட்டின்பல்வேறு நகரங்கள் உருக்குலைந்துள்ளன. என்றாலும் ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து வரு கிறது.
இந்நிலையில் போரின் முதல்நாளிலேயே ரஷ்யாவின் 10 விமானங்களை உக்ரைன் விமானி ஒருவர் சுட்டு வீழ்த்தினார். இதனால் உலகம் முழுவதும் பிரபலமான அந்த விமானி ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’ (கீவ் நகரின் பேய்) என அழைக்கப்பட்டார்.
தொடர்ந்து போரில் மிகவும் தீவிரமாகவும் திறமையாகவும் செயல்பட்ட அந்த விமானியை ‘கோஸ்ட் ஆப் கீவ்’ என்றே உக்ரைன்அடையாளப்படுத்தி வந்தது. ஆனால் ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’ என்று யாருமில்லை. தங்கள் வீரர்களை உற்சாகப்படுத்தவே இப்படி ஒருகற்பனை கதாபாத்திரத்தை உக்ரைன் உருவாக்கியுள்ளது என விமர்சனமும் எழுந்தது.
இந்நிலையில் ‘கோஸ்ட் ஆப் கீவ்’ என அறியப்பட்ட அந்த விமானிகடந்த மாதம் நடந்த போரில் வீரமரணம் அடைந்தாக ‘டைம்ஸ் ஆப் லண்டன்’ இதழ் தெரிவித்துள்ளது.
துணிச்சல் மிகுந்த அந்த விமானியின் பெயர் ஸ்டெபான் தரபால்கா (29) எனவும், ஒரு குழந்தைக்கு தந்தை எனவும் உக்ரைன் அதிகாரிகள் கூறியதாக அந்த இதழ் தெரி விக்கிறது.
கடந்த மார்ச் 13-ம் தேதி ரஷ்யபோர் விமானங்களை எதிர்கொள்வதற்காக மிக்-29 ரக விமானத்தில் தனி ஆளாக ஸ்டெபான் சென்றுள்ளார். இதில் ரஷ்யாவின் 40 ஜெட்விமானங்களை அவர் சுட்டு வீழ்த்திரஷ்யப் படைகளை திணற அடித்துள்ளார். இறுதியில் ஸ்டெபான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அவர் வீரமரணம் அடைந்தார்.
அவருக்கு உக்ரைன் ராணுவத்தின் மிக உயரிய விருதை அந்நாட்டு அரசு வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் உக்ரைன் கதாநாயகன் என்ற பட்டமும் ஸ்டெபானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு உக்ரைனில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஸ்டெபான், இளம் வயதிலேயே விமானியாக வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்தார். இவ்வாறு டைம்ஸ் ஆஃப் லண்டன் இதழ் கூறியுள்ளது