பல இன்னிங்ஸுக்குப் பின்னர் கோலியின் அரைசதம்; குஜராத்தின் தொடர் வெற்றி என்பதையெல்லாம் கடந்து இந்தப் போட்டியில் நாம் கற்க வேண்டிய பாடம் ஒன்று இருக்கிறது. அது பிரதீப் சங்க்வான் பற்றியது.
ஒரு குட்டி பிளாஷ்பேக்
19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் இந்திய அணி உலகக் கோப்பை வெல்வதற்கும், ஐபிஎல் போட்டிகளின் முதல் ஏலம் ஆரம்பிப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது. விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, பிரதீப் சங்க்வான், சித்தார்த் கவுல் என பலர் அப்போது அண்டர் 19 வீரர்கள். முதல் ஏலம் என்பதால், எட்டு அணிகளும் முதலில் ஒரு வீரரை எடுத்துக்கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி உள்ளூர் வீரரான கோலியை எப்படியும் டெல்லி தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஞ்சி போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த சங்க்வானை 50000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுத்தது டெல்லி டேர்டெவில்ஸ். அதாவது இப்போதைய டெல்லி கேப்பிடல்ஸ். இரண்டாம் வாய்ப்பு பெங்களூரு அணிக்கு கிடைக்கவே அவர்கள் கோலியைத் தேர்வு செய்தார்கள். ரஞ்சி தொடரில் விளையாடிய அனுபவம் பெற்ற பிரதீப் சங்க்வான் இதுவரையில் இந்திய அணிக்கு விளையாடவில்லை. கோலியின் வரலாறு நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், சங்க்வான்களின் வரலாறுதான் துயரமானது. நான்காண்டுகளுக்குப் பிறகு சங்க்வானுக்கு இந்த சீசனில் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த ஏலத்தில் அவரின் தொகை 20 லட்ச ரூபாய். மிகவும் குறைவான விலைக்கே தன்னை இணைத்துக்கொண்டார் சங்க்வான். 2008ல் (அப்போதைய டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 43.51 ரூபாய்) அவரை ஏலம் எடுத்த தொகை 21.75 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் டிரெண்டை உடைக்கப் போவதாகச் சொல்லி, டாஸ் வென்றதும் பேட்டிங் தேர்வு செய்தார் டூபிளெஸ்ஸி. இந்த சீசனில் இதற்கு முன்பு இப்படி டிரெண்டை மாற்றுகிறேன் என பேட்டிங் தேர்வு செய்த அணியிடமே, டூபிளெஸ்ஸி பேட்டிங் தேர்வு செய்தது தான் நகைமுரண். யஷ் தயாளுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் சங்க்வானையும், அபினவ் மனோகருக்குப் பதிலாக பேட்டர் சாய் சுதர்ஷனையும் தேர்வு செய்தார் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா
பெங்களூரு பிளேயிங் XI : டூபிளெஸ்ஸி, கோலி, ராஜத் படிதார், மேக்ஸி, ஷபாஷ் அஹமது, லோம்ரோர், தினேஷ் கார்திக், ஹசரங்கா, ஹர்ஷல் படேல், சிராஜ், ஹேசல்வுட்
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் XI : ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா, சாஹா, மில்லர், திவேதியா, ரஷீத் கான், சங்க்வான், ஜோசஃப், லோகி, ஷமி
முதல் ஓவரை வீசினார் ஷமி. கோலியும் , டூபிளெஸ்ஸியும் ஓப்பனிங் இறங்கினார்கள். ஆட்டத்தின் மூன்றாவது பந்தை , கோலி கொஞ்சம் முன்னே வந்து மிட் ஆஃப் திசையில் அடித்தார். அது வழுக்கிக்கொண்டு பௌண்டரிக்குச் சென்றது. அரங்கமே ஆர்ப்பரித்தது. எந்த அணி என்பதையெல்லாம் கடந்து, கோலி மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். அதற்கான வாய்ப்பாக இந்தப் போட்டி அமைந்தது. அடுத்த பந்தை லெக் சைடில் பௌண்டரிக்குத் திருப்பினார். அடுத்த ஓவரை சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் வீச வந்தார் சங்க்வான். எந்தவித கால் மூவ்மெண்ட்டும் இல்லாமல் வெளியே சென்ற பந்தை தொட முயன்று, அது அவுட்சைடு எட்ஜாகி சாஹாவிடம் கேட்ச் கொடுத்து விடைபெற்றார் டூபிளெஸ்ஸி.
ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை வீசினார் ஜோசஃப். சில மாதங்களுக்குப் பிறகு , முழு நம்பிக்கையுடன் காணப்பட்டார் கோலி. டீப் மிட்விக்கெட்டில் ஒரு பௌண்டரி; அடுத்த பந்திலும் அட்டகாசமான டைமிங்கில் இன்னொரு பௌண்டரி. பவர்பிளே இறுதியில் 1விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்தது பெங்களூரு. ரஷீத் கான், லோகி வீசிய தத்தமது முதல் ஓவர்களில் எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல் கோலியும், ரஜத் படிதாரும் ஆடினார்கள். முதல் ஓவரில் வெறும் 3 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்த லோகி, தன் அடுத்த ஓவரை வீச வந்தார். லோகி வீசிய லோ ஃபுல் டாஸை லாங் ஆன் பக்கம் சிக்ஸருக்கு அனுப்பினார் கோலி. அடுத்த பந்திலேயே இன்னொரு பௌண்டரி. ரஜத்தும் தன் பங்குக்கு ஜோசஃப் பந்தில் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸ், பௌண்டரி என அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார். 14 போட்டிகளுக்குப் பிறகு, ஷமி பந்தில் சிங்கிள் அடித்து கோலி அரைசதம் கடந்தார். பௌண்டரிகள் அவ்வப்போது வந்தாலும், டி20க்கான வேகத்துடன் கோலி இந்தப் போட்டியில் ஆடவில்லை. ஆனாலும், கோலி அடித்ததே எல்லோருக்கும் போதுமானதாய் இருந்தது. இன்னொரு பக்கம் ரஜத் படிதாரும் அரைசதம் கடந்திருந்தார். சங்க்வான் பந்தில் கில்லிடம் எளிதாக கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரஜத்.
ஷமி பந்தில் டூ டவுனில் வந்த மேக்ஸி அடித்த சிக்ஸ் ஸ்டேண்ட்ஸுக்கே சென்றது. ஷமி வீசிய பந்தை கோலி கவர் டிரைவ் ஆட முற்பட, அதற்கு முன்பாகவே பந்து ஸ்டம்ஸை பதம் பார்த்தது. கடுப்புடன் வெளியேறினார் கோலி. அதே ஓவரில் மீண்டும் ஸ்குயர் லெக்கில் ஒரு சிக்ஸர் அடித்தார் மேக்ஸி. ஒரு விக்கெட் விழுந்தால், அனைத்து விக்கெட்டுகளையும் கொடுக்க வேண்டும் என்கிற பெங்களூருவின் குல வழக்கப்படி அடுத்து வந்த வேகத்தில் விடைபெற்றார் தினேஷ் கார்த்திக். அதே ரஷீத் கான் ஓவரில் ஸ்விட்ச் ஹிட்டில் பௌண்டரி அடித்தார் மேக்ஸி. அப்ப இன்னிக்கு மேக்ஸி தான் காப்பாற்ற வேண்டும் என வேண்டிக்கொண்டனர் பெங்களூரு ரசிகர்கள். நினைத்த கனத்தில் லோகி பந்தில் பௌண்டரி அடித்து அடுத்த பந்தையும் கவரில் தூக்கியடிக்க, அதை அட்டகாசமாக கேட்ச் பிடித்து மேக்ஸியை அவுட்டாக்கினார் லோகி. ஆட்டத்தின் கடைசி ஓவரில் லோம்ரோர் ஒரு சிக்ஸ் அடித்தார். அடுத்தும் தூக்கியடிக்க, அதிர்ஷ்டம் லோம்ரோருக்கு கேபிள் ரூபத்தில் வந்தது. மில்லர் பிடித்த அட்டகாசமான கேட்சை பந்து கேபிளில் பட்டுவிட்டதால் , அவுட்டில்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதனால் பெரிய பாதிப்பில்லை. ஆறு விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது பெங்களூரு
இந்த சீசனில் குஜராத் இருக்கும் ஃபார்முக்கு இதெல்லாம் அசால்ட்டு என்பது போல, மேக்ஸி வீசிய முதல் ஓவரிலேயே பத்து ரன்கள் எளிதாக வந்தது. பவர்ப்ளே இறுதியில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்தது குஜராத். கில் 17 ரன்களுடனும், சாஹா 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் தான் முதல் விக்கெட் விழுந்தது. ஹசரங்கா வீசிய பந்தை சாஹா தூக்கியடிக்க அதை லாங் ஆஃபில் அட்டகாசமாக கேட்ச் பிடித்தார் ரஜத் படிதார். ஷபாஷ் அஹமது பந்தில் ஒரு பௌண்டரி, மிட் விக்கெட்டில் ஒரு சிக்ஸ் என அடித்து எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார் கில். பத்து ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது குஜராத்.
அதிரடியாய் ஆட வேண்டுமென ஹர்திக் பாண்டியாவும் லாங் ஆன் பக்கம் தூக்கியடிக்க அதை லோம்ரோர் கேட்ச் பிடித்தார். இந்த சீசனில் தன் இரண்டாவது பெரிய போட்டியை ஆடத் தயாரானார் கில்லர் தி மில்லர். இரண்டு பௌண்டரிகளுடன் இருபது ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சாய் சுதர்ஷன். மில்லரும் திவேதியாவும் இணைந்து ஆடத் தொடங்கினர். ஹசரங்கா பந்துவீச்சில் லாங் ஆனில் ஒரு பௌண்டரி; கவரில் ஒரு சிக்ஸர் என மில்லர் கலக்க, மறுமுனையில் திவேதியா சிராஜ் பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு பௌண்டரிகள் அடித்து அசத்தினார்.
ஆட்டத்தின் 18வது ஓவரை வீசினார் ஹேசல்வுட். 88 மீட்டருக்கு லாங் ஆனில் ஒரு சிக்ஸ் அடித்தார் திவேதியா. ரைட்டு சோளி முடிஞ்ச் என முடிவு செய்தனர் பெங்களூரியன்ஸ். அடுத்து ஒரு கவர் டிரைவில் பௌண்டரி என அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள். கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட, அதை எளிதாக எட்டி முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டது குஜராத் டைட்டன்ஸ்.
25 பந்துகளில் அதிரடியாய் 43 ரன்கள் அடித்த திவேதியா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.