இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (ஏப்ரல் 30) நிகழ்கிறது. சூரியனும் சந்திரனும் இணைந்து சஞ்சரிக்கும் நாள் அமாவாசை தினமாகும். அவை ராகுவுடன் இணைந்து சஞ்சாரிக்கும் நாளில் சூரிய கிரகணம் நிகழும். அதற்கு பின் வரும் பௌர்ணமி சந்திர கிரகணமாக அமையும். அந்த நாளில் சந்திரன் கேதுவுடன் இணைந்து சஞ்சரிப்பார். இந்த இயற்கை நிகழ்வுகளைப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கணித்து அவற்றைக் கடைப்பிடிக்கும் முறைகளையும் நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். எனவே ஒவ்வோர் ஆண்டும் நிகழும் கிரகணங்கள் குறித்து அறிந்துகொள்வது மிக அவசியம்.
2022-ம் ஆண்டு நிகழும் கிரகணங்கள்:
இந்த 2022-ம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழ இருக்கின்றன. இவற்றில் இரண்டு சந்திர கிரகணங்கள் மற்றும் இரண்டு சூரிய கிரகணங்களும் அடங்கும்.
30.4.22 – சனிக்கிழமை – சூரியகிரகணம்
16.5.22 – திங்கள் கிழமை – சந்திர கிரகணம்
25.10.22 – செவ்வாய்க்கிழமை – சூரியகிரகணம்
8.11.22 – செவ்வாய்க்கிழமை- சந்திரகிரகணம்
இவற்றில் இந்த ஆண்டின் முதல் சூரியகிரகணம் இன்று நிகழ்கிறது.
சூரியகிரகண நேரம்: இன்று நிகழும் சூரியகிரகணம் சுமார் 4 மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நண்பகல் 12.15 மணி முதல் பிற்பகல் 2.11 மணி இது நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் நம் நாட்டில் தெரியாது.
இந்த கிரகணம் சிலி, அர்ஜெண்டினா, உருகுவே, மேற்கு பாராகுவே, தென்மேற்கு பொலிவியா, தென்கிழக்கு பெரு மற்றும் தென்மேற்கு பிரேசிலில் சிறு பகுதி ஆகிய இடங்களில் தெரியும் என்று வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜோதிடர் சொல்வது என்ன?
“பொதுவாக கிரகண காலத்தில் ஆலயங்கள் மூடப்பட்டிருக்கும். பலரும் முன்னோர் வழிபாடுகள் செய்வார்கள். பல பரிகாரங்களும் கடைப்பிடிக்கப்படும். ஆனால் இவை அனைத்துமே நமக்கு அந்த கிரகணம் தெரிவதைப் பொறுத்தே பின்பற்றப்பட வேண்டியவை. எனவே நமக்குத் தெரியாத கிரகணத்துக்கு எந்த நியமங்களும் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று சாஸ்திர விற்பனர்கள் தெரிவிக்கின்றனர்.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நேற்று அதிசார சனிப்பெயர்ச்சி நிகழ்ந்திருக்கும் நிலையில் சனி பகவான் செவ்வாயோடு இணைந்திருக்கிறார். பொதுவாகவே சனி செவ்வாய் சேர்க்கை நல்ல பலன்களைத் தராது என்று சொல்வார்கள். இந்த வேளையில் சூரிய கிரகணமும் நிகழ்வது அரசு, அரசியல் தொடர்பான சில மாற்றங்களை ஏற்படுத்தலாம். தனிப்பட்ட வாழ்விலும் சிலருக்கு சிக்கல்கள் நேரலாம் என்பதால் இந்தக் கிரகண வேளையில் இறைவழிபாடு செய்வது நல்லது. குறிப்பாக சனி தசை நடப்பவர்கள், ஏழரைச் சனி பாதிப்பில் இருப்பவர்கள், அஷ்டம மற்றும் அர்த்தராஷ்ட்ரம சனியினால் துன்புறுபவர்கள் மாலை அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று இறைதரிசனம் செய்வது கெடுபலன்களைக் குறைத்து நற்பலன்களை அதிகரிக்கும்” என்று விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன் தெரிவித்தார்.