திருப்பதி:
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம், காசிம்கோட்டா நரசிங்க பில்லியில் ஆந்திர கிராம வங்கி இயங்கி வருகிறது.
நேற்று மதியம் 2 மணி அளவில் ஊழியர்கள் அனைவரும் உணவு அருந்திக் கொண்டு இருந்தனர்.
அப்போது டிப்டாப் உடையணிந்த வாலிபர் ஒருவர் வங்கிக்குள் நுழைய முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி உணவு இடைவேளை நேரம் என்பதால் வாலிபரை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். அதனை பொருட்படுத்தாத வாலிபர் காவலாளி தள்ளி விட்டு நேராக கேஷ் கவுண்டருக்கு சென்றார்.
அங்கு கவுன்டரில் இருந்த பிரதாப் ரெட்டியின் தலையில் துப்பாக்கியை வைத்து கவுன்டரின் உள்ள அனைத்து பணத்தையும் எடுத்து பையில் வைக்குமாறு கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதாப் ரெட்டி கேஷ் கவுன்டரில் இருந்த ரூ 3.30 லட்சத்தை வாலிபரின் பையில் வைத்தார்.
வாலிபர் ஒருவர் துப்பாக்கி முனையில் பணத்தை கேட்டு மிரட்டுவது கண்ட வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வாலிபரின் கையில் துப்பாக்கி இருந்ததால் வங்கி ஊழியர்கள் யாரும் அவரை மடக்கி பிடிக்க முயற்சி செய்யவில்லை
இதையடுத்து கொள்ளையடித்த பணத்தை சாவகாசமாக எடுத்துக்கொண்டு வங்கியில் இருந்து வாலிபர் வெளியே சென்றார்.
இதுகுறித்து வங்கி மேலாளர் அனாகபள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அக்கா பள்ளி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் சார்லி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வங்கியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.
கொள்ளையன் இந்தியில் பேசியதால் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.