சென்னை போரூரில் உள்ள விக்னேஸ்வரா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்திருக்கிறார். கொரோனா பேரிடர் சமயத்தில் பணியை இழந்த பிரபு, அதற்குப் பின்பு பணிக்கு எதுவும் செல்லாது வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த காலகட்டத்தில், இவர் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இவருக்கும், இவரின் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனனி வெளியே சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பிரபு வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து போரூர் பகுதி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பிரபுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
காவல்துறையினர் தற்கொலை தொடர்பாக விசாரணை செய்ததில், பிரபு சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாக இருந்துள்ளார். இதில் 35 லட்சம் ரூபாய் வரை இழந்ததாகக் கூறப்படுகிறது. கிரெடிட் கார்டு மூலமாக 15 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றும், அவரின் தந்தை வீட்டுக் கடனை அடைக்கக் கொடுத்த 20 லட்சம் ரூபாய் என மொத்தம் 35 லட்சம் ரூபாய் வரை ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் இழந்ததாகக் கூறப்படுகிறது.
வங்கியில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த அழுத்தம் கொடுத்ததால் பிரபு மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார். இந்த நிலையில்தான், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பிரபுவின் தற்கொலைக்குக் காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்துவருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.