உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவது ஏன்? மே தின வரலாறு

இன்று மே 1. சர்வதேச தொழிலாளர் தினம்.. சுதந்திர தினம், அன்னையர் தினம், காதலர் தினம் தொடங்கி முட்டாள்கள் தினம் வரை அனைத்திற்கும் நாம் ஒவ்வொரு தினம் கொண்டாடுகிறோம். சில தினங்களுக்குப் பின்னால் காரணங்கள் உண்டு. ஆனால் சில தினங்களுக்குப் பின்னால் வரலாறே உண்டு. மே தினத்திற்குப் பின்னால் அப்படி ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு உண்டு.

நாடோடியாக இருந்த மனிதன் உழைப்பின் மூலமாகவே இன்று நவ நாகரீகமாக வாழப் பரிணாமம் அடைந்தான். ஆனால் உழைப்பாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கான பிரதிபலன் கிடைக்கிறதா என்பது இன்றளவும் கேள்விக்குறியே. 8 மணி வேலை, அடிப்படை ஊதியம், தொழிலாளர் வைப்பு நிதி, காப்பீடு, பெண்களுக்குப் பணியிடத்தில் கிடைக்கும் உரிமைகள், தொழிற்சங்கங்கள் என இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளுக்கும் மே தினப் போராட்டமே விதையாய் அமைந்தது. 

இந்த மே தினத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டியது நம் கடமையும் கூட. 1800-களில் தொழிற்துறை வளர்ச்சி அடையத் தொடங்கிய காலகட்டத்தில் 20 மணி நேரம் வரை வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமை எனத் தொழிலாளர்கள் பல வகைகளில் சுரண்டப்பட்டனர். இந்தச் சுரண்டலை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடைபெற்றன. 1806-ம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் போராடத் தொடங்கியபோதே, அவர்கள் கடினமாக வேலை வாங்கப்பட்டது உலகிற்குத் தெரியவந்தது.

மேலும் படிக்க | உழைப்பாளர் தினத்திற்கு, எடப்பாடி பழனிச்சாமி, மு.க ஸ்டாலின், எல்.முருகன் வாழ்த்து

பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதற் தொழிற்சங்கமாகக் கருதப்படுகிறது. இந்தத் தொழிற்சங்கம் உருவான இரு ஆண்டுகளுக்குப் பின்புதான் இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகத் தொடங்கின. அதேபோல பத்து மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன்முதலாக வைத்த பெருமையும் இச்சங்கத்துக்கே உண்டு. தொடர் போராட்டத்தின் எதிரொலியாக வேன் பியுரன் தலைமையிலான அமெரிக்க அரசு, அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பத்து மணி நேர வேலை நாள் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் பத்து மணி நேர வேலையை வலியுறுத்திப் போராடி அதில் வெற்றியும் கண்டனர். 

இதனைத் தொடர்ந்து குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் எல்லா வளரும் நாடுகளிலும் பரவத் தொடங்கியது. 1858-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேரப் பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன்வைத்துப்  போராடி அதில் வெற்றியும் பெற்றனர்.

1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களே மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணங்களாய் அமைந்தன. 1884, அக்டோபர் 7-ம் நாள் சிகாகோவில் நடைபெற்ற மாநாட்டில், அமெரிக்கா மற்றும் கனடா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில், 1886-ம் ஆண்டு மே முதல் நாள் முதல், வேலை நாள் என்பது 8 மணி நேரம்தான் இருக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

சில மாதங்களுக்குப் பின் 1885-ல் நடைபெற்ற மாநாட்டில், முந்தைய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை வளர்ந்து போராட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கின. 1886 மே ஒன்றாம் தேதி சிகாகோ நகரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு 8 மணி நேர வேலைக்காகப் போராடினர். இதனைத் தொடர்ந்து போராடியவர்களைக் கைது செய்தும், அடக்குமுறையைக் கையாண்டும் போராட்டத்தைக் கலைக்க அரசு முயன்றது. இந்த அடக்கு முறையை எதிர்த்து மே 4-ம் தேதி வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டத்தில் ராணுவ அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட, இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர்.1886ஆம் ஆண்டின் பிற்பாதி முழுவதும் தொழிலாளர்கள் மீது  திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. 

May day protest

இதனைத் தொடர்ந்து 1889-ம் ஆண்டு மீண்டும் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. 1889-ம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற மாநாட்டில், எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தைச் சட்டப்பூர்வமாக்கக் கோரி போராடத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக 1890 மே முதல் நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட நாளில் எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் அவர்களின் நாட்டு சூழ்நிலைக்கேற்ப ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என மாநாடு அறிவித்தது. இதனைத் தொடர்ந்தே ஐரோப்பா, ஜெர்மனி, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் தொழிலாளர் போராட்டங்கள் விரிவடைந்தன. 1890-ம் ஆண்டு பல ஐரோப்பிய நாடுகளில் மே தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் மே தினக் கொண்டாட்டம் சிறிது சிறிதாகப் பல்வேறு நாடுகளில் பரவியது. 

தற்போது 80 நாடுகளுக்கும் மேல் மே ஒன்றாம் தேதியை தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளன. இந்தியாவின் மே தினம் முதல் முதலாகக் கொண்டாடப்பட்டது தமிழகத்தில்தான். இந்தியாவின் முதல் தொழிற்சங்கவாதியான சிங்காரவேலர், 1923-ம் ஆண்டு சென்னையில் மே தினக் கொண்டாட்டத்தை நடத்தினார். அதே போல இந்தியாவில் முதன்முதலில் மே தினத்திற்கு விடுமுறை அறிவித்தது கேரளாவில்தான். 1957-ம் ஆண்டு கேரளாவில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி மே தினத்திற்கு விடுமுறை அறிவித்தது.

Singaravelar

இவ்வாறு போராடிப் பெறப்பட்ட தொழிலாளர்களின் பல உரிமைகள் கொரோனா காலத்திற்குப் பின் பறிபோகத் தொடங்கியுள்ளன. தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போக வைக்கக் கூடிய வகையிலான மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. போராடிப் பெற்ற உரிமைகளைப் பற்றி அறிந்து கொள்வது எவ்வாறு நமது உரிமையோ, அதேபோல அவற்றைத் தக்க வைப்பதும் நமது கடமையாகும். அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள் .

மேலும் படிக்க | May Day 2021: மே தினம், சர்வதேச உலக தொழிலாளர் தினம் இன்று

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.