உழைக்கும் மக்களின் உயர்வை உணர்த்தும் வகையில், உலகம் முழுவதும் மே முதல் நாளான இன்று தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
உதிரத்தையே வேர்வையாகச் சிந்தி உழைத்து, மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றுபவர்கள் உழைப்பாளர்கள். 8 மணி நேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாகப் பெற்றநாளே மே தினமாகக் கொண்டாடப்படுகிறது.
17 மணி நேரம், 18 மணி நேரமாக இருந்த வேலைநேரத்தை குறைக்க வேண்டுமென அமெரிக்காவிலும், பின்னர் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன.
1891-ம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் இன்டர்நேஷனலின் தீர்மானத்தின்படி மே 1-ம் நாள் சிகாகோ போராட்டத்தைச் சிறப்பிக்கும் வண்ணம் சர்வதேச தொழிலாளர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது. தொழிலாளர்களின் உழைப்பை உலக மக்கள் அனைவரும் அறியும் நாளாக இந்த நாள் பார்க்கப்பட்டது.
பின்தங்கிக் கிடந்த பல நாடுகள், இன்று வளரும் நாடுகளாகவும், வளர்ச்சியடைந்த நாடுகளாகவும் முன்னேறியிருப்பதற்கு தொழிலாளர்களின் கடின உழைப்பே காரணம். உழைப்புக்கும், வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லாமல், விளிம்புநிலையில் இருக்கும் தொழிலாளர்கள் உயர்வடையும் நாளே உண்மையான உழைப்பாளர் தினமாகும்.