வாஷிங்டன்: ட்விட்டர் தலைமை நிர்வாகி பராக் அகர்வால் நடத்தியக் கூட்டத்தில் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து ஊழியர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். 44 பில்லியன் டாலருக்கு மஸ்க்கிடம் விற்க ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் கைமாறும் நிலையில் இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் கருத்து தெரிவித்து இருந்தார்.
ஊழியர்களின் கூட்டம் ஒன்றில் பேசிய பாரக் அகர்வால் கூறுகையில் ‘‘ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது’’ எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து பாரக் அகர்வாலிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. ஊழியர்களின் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு ஊழியர் “பங்குதாரர்களின் மதிப்பு மற்றும் நம்பிக்கைக் கடமையைப் பற்றி கேள்விப்பட்டு நான் சோர்வாக இருக்கிறேன்.
ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு பல ஊழியர்களுக்கு வேலை கிடைக்காமல் போகும் சாத்தியக்கூறுகள் பற்றி உங்கள் நேர்மையான எண்ணங்கள் என்ன” என ஒரு ட்விட்டர் ஊழியர் அகர்வாலிடம் கேட்டார், அவர் சத்தமாகவும், அனைவரும் கேட்கும் வகையிலும் இந்த கேள்வியை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அகர்வால், ட்விட்டர் எப்போதும் தனது ஊழியர்களைப் பற்றி அக்கறை கொண்டிருப்பதாகவும், அதைத் தொடர்ந்து செய்யும் என்றும் பதிலளித்தார். அவர் கூறகையில்
“எதிர்கால ட்விட்டர் அமைப்பு உலகம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதன் தாக்கம் குறித்து தொடர்ந்து அக்கறை செலுத்தும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார். இதுபோலவே வேறு சில ஊழியர்களும் பாரக் அகர்வாலிடம் கேள்விகள் கேட்டதாக தெரிகிறது.
ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தை வாங்க 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை முடித்த நிலையில் எலான் மஸ்க் ட்விட்டரின் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் நடைமுறைகளையும், ட்விட்டரில் பேச்சு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை வகுப்பது தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறார்.
ட்விட்டர் நிறுவனம் ஊழியர்களின் எண்ணிக்கையை தினமும் கண்காணிக்கும் என்று அண்மையில் கூறினார். இதனால் சரியான செலவுக் குறைப்பு நடவடிக்கை இருக்கும் என்ற அச்சமும் ட்விட்டர் ஊழியர்களிடம் உள்ளது. ட்விட்டரில் ஆட்குறைப்பு இருக்குமா என்ற கருத்தும் டவிட்டர் நிறுவன ஊழியர்களிடம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.