ஓசூர்:ஓசூரில் திடீரென எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதில், குழந்தையுடன் தனியார் நிறுவன ஊழியர் உயிர் தப்பினார்.
ஓசூர் ஜுஜுவாடி பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் சதீஷ். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பொம்மசந்திரா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேட்டரியில் இயங்கும் எெலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.
இருசக்கர வாகன பேட்டரிக்கு தினமும் சார்ஜ் ஏற்றி அந்த வாகனத்தில் பணிக்கு சென்று வர பயன்படுத்தி வந்தார். நேற்று காலை வழக்கம்போல பணிக்குச் செல்ல இருசக்கர வாகனத்தில் சதீஷ் புறப்பட்டார்.
அப்போது, அவருடைய குழந்தை, “நானும் வருவேன்” என அடம்பிடித்ததால் குழந்தையை சமாதானப்படுத்த, குழந்தையை வாகனத்தில் அமர வைத்த சதீஷ் அப்பகுதியில் 2 சுற்று சுற்றிவிட்டு வீட்டின் முன்பு குழந்தையை இறக்கிவிட்டார்.
தீயில் கருகிய வாகனம்: பின்னர் பணிக்கு செல்ல வாகனத்தை இயக்கியபோது வாகனத்தின் சீட் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதுடன், திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், அதிர்ச்சியடைந்த சதீஷ் உடனடியாக வாகனத்தில் இருந்து இறங்கி அங்கு இருந்தவர்களின் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். இதில், வாகனத்தின் சீட் உள்ளிட்ட பெரும் பகுதி தீயில் கருகி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக குழந்தையும், தந்தையும் தப்பினர்.
இதுதொடர்பாக ஓசூர் சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.