மும்பை : ‘கொரோனாவால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய 12 ஆண்டுகள் ஆகும்’ என, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து, ரிசர்வ் வங்கியின் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுக் குழு உறுப்பினர்களின் கருத்துகள் அடங்கிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை கொரோனா தொற்று ஏற்படுத்திஉள்ளது. கொரோனாவால் 2020 – 21 மற்றும் 2021 – 22ம் நிதியாண்டுகளில் முறையே, 19.10 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 17.10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு 2022 – 23ம் நிதியாண்டில் 16.40 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் ஒட்டுமொத்தமாக 50 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்த இழப்பை ஈடு செய்ய 12 ஆண்டுகள் ஆகும். தற்போதைய ரஷ்யா – உக்ரைன் போரும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.’இந்த அறிக்கை, ஆய்வுக் குழு உறுப்பினர்களின் சொந்த கருத்து’ என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு எடுத்து வரும் சீர்திருத்த நடவடிக்கைகள், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Advertisement