சிங்கப்பூர் : போதைப் பொருள் கடத்தியதால் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட இந்திய வம்சாவளி நபருக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் மலேஷியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான நாகேந்திரன் தர்மலிங்கம் 34 ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதால் கைது செய்யப்பட்டார். 2010ல் அவருக்கு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது.இந்த தண்டனையை எதிர்த்து அவரது தாய் கடைசியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சமீபத்தில் அங்குள்ள நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து 27ம் தேதி நாகேந்திரனுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இந்த வழக்கில் நாகேந்திரனுக்கு மன்னிப்பு அளிக்கக்கோரி மலேஷிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்குப் மற்றும் அதன் வெளியுறவுத் துறை அமைச்சர் சைபுத்தின் அப்துல்லா ஆகியோர் சிங்கப்பூர் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தனர். எனினும் அவர்களின் கோரிக்கையை ஏற்க சிங்கப்பூர் அரசு மறுத்துவிட்டது.
துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு முதல் நாள் சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் மற்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் அவர்களுக்கு பதில் கடிதம் அனுப்பினர். அதில் ‘போதை பொருள் கடத்தல்காரர் நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவலை சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
Advertisement