மாணவி தற்கொலை:
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் அந்தக் கல்லூரி விடுதியில்தான் தங்கிப் படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி விடுதியில் உள்ள இரண்டாவது மாடியில் அந்த மாணவி துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், அந்த மாணவியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதையடுத்து, அந்த மாணவியின் உடல் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த தற்கொலை தொடர்பாகச் செங்கல்பட்டு பகுதி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி இறந்த மாணவியின் உடலை அவரின் பெற்றோர்கள் வாங்க மறுப்பு தெரிவித்தனர்.
ராகிங் தான் காரணமாக?
தகவலறிந்த வந்த காவல்துறையினர் மாணவியின் தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்வதற்கு சில நாள்களுக்கு முன்பாகதான் அவரின் தந்தையிடம், விடுதியில் உள்ள சில மாணவிகள் தன்னை தொல்லை செய்வதாகவும், மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், தனக்குப் படிக்கப் விருப்பமில்லை என்று ஊருக்கு வந்துவிடுவதாக கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவி ஊருக்குப் புறப்படத் தயாராகியிருக்கிறார்.
இந்தச் சூழலில்தான், அங்குள்ள மற்ற மாணவிகள் இன்னும் சில தினங்களில் தேர்வு உள்ளது. தேர்வை முடித்துவிட்டுச் செல்லலாம் என்று கூறியதாகத் தெரிகிறது. எனவே அந்த மாணவி விடுதியில் தங்கியிருந்திருக்கிறார். இந்த நிலையில்தான், அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் மகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குக் கோழை கிடையாது. உரிய நீதி கிடைக்கும் வரை அவளின் சடலத்தை வாங்க மாட்டோம் என அவரின் பெற்றோர் கூறியுள்ளனர். மேலும், இறந்த மாணவியின் குடும்பத்தினர் தற்கொலை தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
விசாரணை குழு:
இது தொடர்பாக பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில், “மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தவேண்டும். தமிழக முதல்வர் மாணவியின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்யவேண்டும்” என்று கூறியுள்ளார்.
முதற்கட்டமாக பிரேத பரிசோதனை முடிவில் மாணவி தற்கொலைதான் செய்துகொண்டார் என்பது உறுதியாகியுள்ளது. தற்போது மாணவியின் தற்கொலைக்கான கரணம் குறித்து விசாரணை நடத்த ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விசாரணைக் குழுவின் அலுவலகராகச் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி (புதுப்பாக்கம்) முதல்வர் பேராசிரியர் கௌரி ரமேஷ் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குழு விசாரணை மேற்கொண்டு உடனடியாக அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், மாணவியின் தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த மாணவியோடு தங்கியிருந்த சக மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணைக் குழு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும். சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் விடுதியிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.