சேலம் குமரகிரி பை-பாஸ் சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மகன் உயிரிழந்தார். மேலும், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிதாசன். ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அருண் (26). இவர் நேற்று முன்தினம் (29-ம் தேதி) சென்னையில் இருந்து ஊட்டிக்கு தனது நண்பர்களான ஜேம்ஸ் அல்பர்ட் (32), ஆனந்த (32), மரியா பிரண்ட்ஜான் (26) ஆகியோருடன் காரில் புறப்பட்டார். காரை சென்னையைச் சேர்ந்த ஓட்டுநர் அருண் ஜார்சன் ஓட்டியுள்ளார்.
நேற்று அதிகாலை உடையாப்பட்டி வழியாக கார் சென்றபோது, குமரகிரி பை-பாஸ் சாலையில் பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அவர் மீது கார் மோதாமல் இருக்க காரை ஓட்டுநர் இடது புறமாக திருப்ப முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது.
இடிபாட்டில் சிக்கி இருந்தவர்களை அம்மாப்பேட்டை போலீஸார் மீட்டு சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அருண் உயிரிழந்தார். அவரது நண்பர்கள் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட நான்கு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அம்மாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.