ஜப்பான், தாய்லாந்து பயணியருக்கு கொரோனா பரிசோதனை| Dinamalar

பெங்களூரு:’கொரோனா தொற்று பரவலால், ஜப்பான், தாய்லாந்திலிருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையம், மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு அறிகுறி உள்ள பயணியருக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை செய்ய வேண்டும்’ என சுகாதாரம், குடும்ப நலத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கர்நாடகாவில் கொரோனா நான்காவது அலை ஏற்படாமல் இருக்க, அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் சுகாதாரம், குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
பெங்களூரு சர்வதேச விமான நிலையம், மங்களூரு சர்வதேச விமான நிலையங்களில் வந்திறங்குவோருக்கு, ‘தெர்மல் ஸ்கிரீனிங்’ செய்ய வேண்டும்.இங்கு வரும் பயணியருக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்படும். அதில், அறிகுறி உறுதியானால், அவர்களின் மரபணு மாதிரிகள், ஆய்வகத்துக்கு அனுப்பப்படும்.தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதாரம், குடும்ப நலத்துறை முதன்மை செயலர் அனில் குமார் கூறியதாவது:தற்போது, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணியர்களில், 2 சதவீதம் பேர், சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிக்கப்படுகின்றனர்.சமீபத்தில் சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம், நியூசிலாந்து, ரஷ்யா மற்றும் தென் கொரியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எட்டு நாடுகளிலிலிருந்து ஜப்பான், தாய்லாந்திலிருந்து மட்டுமே பெங்களூருக்கு நேரடி விமான சேவை உள்ளது.எனவே, இவ்விரு நாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.