தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் கடந்த 26-ம் தேதி இரவு நடைபெற்ற தேர்த் திருவிழாவில், மின்சாரம் தாக்கி மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் பலியாகினர். காயமடைந்த 17-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

இதைத்தொடர்ந்து, விபத்து குறித்து விசாரிக்க வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில், ஒருநபர் குழுவை தமிழக அரசு அமைத்தது. நேற்று குமார் ஜெயந்த் களிமேடு கிராமத்தில் விசாரணை நடத்தினார். இன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளார்.

முன்னதாக தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி ரவளி பிரியா, மின்துறை, நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மருத்துவர்கள் குழு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு துறை அதிகாரிகளிடமும் விபத்து குறித்த தகவல்களை முதன்மைச் செயலாளர் கேட்டறிந்தார்.
பின்னர் களிமேடு கிராமத்தில், விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார். விபத்துக்குள்ளான தேர், அதன் மேல் பகுதியில் செல்லும் உயர் மின் அழுத்த லைன் ஆகியவற்றை பார்த்ததுடன் அந்த இடத்திலேயே பொதுமக்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். விழாக்குழு, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு மேற்கொண்ட பின்னர் பேசிய குமார் ஜெயந்த், “முதற்கட்டமாக விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து ஒரு அறிக்கையும், இரண்டாவதாக வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துக்களை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்து அது குறித்தும் அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். அத்துடன், விபத்து குறித்து யாரேனும் தகவல் தெரிவிக்க விரும்பினால், தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம்” என்றார்.