We Work for Tamilnadu development; Stalin speech at Dindigul: மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து மாநிலங்களை முடக்க நினைக்கின்றனர் என்றும், தமிழ்நாட்டை தலை நிமிர வைக்க ஒவ்வொரு நாளும் உழைத்து வருகிறேன் என்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப்பணிகளை துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவிப்புகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவேன். அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்து வருகிறேன். அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது, நான் அந்த விஷயத்தில் உஷாராக இருப்பேன்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, மிகப்பெரிய மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்து வருகிறோம். சமூகத்தில் சமூக நீதியை உருவாக்குவதிலும், பொருளாதாரத்தில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க செய்வதிலும், உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், பெண்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதிலும் உழைத்து வருகிறோம்.
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு உலக அளவில் முன்னிலை பெற ஊக்கத்துடன் பணியாற்றுகிறேன். தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னிலை பெற அனைவரும் துணை நிற்க வேண்டும். மாநிலத்தின் அரசியல், சட்டம், நிதி ஆகியவற்றின் உரிமைகளை முடக்க சிலர் நினைக்கின்றனர், அது ஒருபோதும் நடக்காது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. மாநிலங்களை முடக்குவதாக நினைத்து, ஒருசிலர் மக்களை முடக்கி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: இலங்கைக்கு உதவும் ஸ்டாலினின் தீர்மானம்; மாநில உரிமை மற்றும் கடந்த கால வரலாற்றை மாற்றும் முயற்சி
உங்களில் ஒருவனாக இருந்து தமிழ்நாட்டை தலை நிமிர வைக்க தினமும் உழைத்து வருகிறேன். இந்த அரசு மக்களுக்கான திராவிட மாடல் அரசாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் உயர்வுக்கு காரணமான சமூக நீதி, மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவம் போன்ற அனைத்தும் இந்தியா முழுமைக்கும் பரவ வேண்டும்.
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நாங்கள் எல்லாம் மக்கள் தொண்டர்கள். நான் தலைமை தொண்டனாக இருந்து அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றித் தருவேன். இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.