திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். திருப்பதியில் மட்டுமல்லாமல் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்துக்கு சொந்தமாக பல்வேறு மாநிலங்களில் வெங்கடாஜலபதிக்கு கோயில் உள்ளது.
சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்துக்கு சொந்தமான கோயில் தி.நகரில் உள்ளது. அதேபோல், சென்னை, உடுமலைப்பேட்டை, மதுரை, புதுவையில் தேவஸ்தானம் சார்பில் கோயில்கள் கட்டப்படும் என்று அறங்காவலர் குழு தலைவர்
சுப்பா ரெட்டி
தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் கோயில் கட்டுவதற்காக ரூ.500 கோடி மதிப்பிலான 10 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திடம் அம்மாநில அரசு வழங்கியுள்ளது. மராட்டிய மாநிலம், நவி மும்பையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் ரூ.500 கோடி மதிப்பிலான 10 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்களை அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே, திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியிடம் வழங்கியுள்ளார்.
இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில அரசு வழங்கிய நிலத்தில் கோயில் கட்ட ரூ.50 கோடி முதல் ரூ.60 வரை செலவாகும் என கூறப்படும் நிலையில், கட்டுமானத்திற்கான முழு செலவையும் ஏற்று கொள்வதாக ரேமாண்ட் குழுமம் தெரிவித்துள்ளதாக சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், நிலம் ஒதுக்கிய அம்மாநில அரசுக்கும், கட்டுமான செலவை ஏற்றுக் கொண்டுள்ள ரேமாண்ட் குழுமத்துக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.