திருவான்மியூர்:
சென்னை திருவான்மியூர் குப்பம் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது தாய் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
நேற்று குமாரின் தாய்க்கு 16ம் நாள் காரிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது தொடர்பாக நடந்த விருந்தில் இதில் குமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். குமாரின் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் (27), அருண்குமார் (22) ஆகியோர் காரியம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பட்டதாரி வாலிபர்களான இவர்கள் இருவரும் காரிய நிகழ்ச்சியை யொட்டி மது அருந்தினர். இதன்பிறகு நேற்று மதியம் இவர்களுக்கும் அதேபகுதியை சேர்ந்த தினேஷ் குமார் என்ற வாலிபருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அங்கிருந்தவர்கள் தகராறை விலக்கி விட்டுள்ளனர். இருப்பினும் இந்த பிரச்சினை முடிவுக்கு வராமலேயே இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் சதீஷ்குமார், அருண்குமாரும் நண்பர் குமாரின் வீட்டுக்கு சென்று சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது தினேஷ்குமாரும் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் மீண்டும் இவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். அப்போது சதீஷ் குமாரும், அருண்குமாரும் சேர்ந்து தினேஷ்குமாரை பார்த்து உன்னை கொல்லாமல் விட மாட்டோம் என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், நான் உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என்று கடும் கோபத்தில் கூறியுள்ளார். பின்னர் அங்கிருந்து சென்ற அவர் சிறிது நேரத்தில் பெரிய கத்தியுடன் வந்தார்.
திடீரென சதீஷ்குமார், அருண்குமார் இருவர் மீதும் பாய்ந்த தினேஷ்குமார் சரமாரியாக இருவரையும் கத்தியால் குத்தினார். இதில் கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் ராமசுந்தரம் தலைமையில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கொலையுண்ட இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட 2 வாலிபர்களும் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். இவர்களில் வாலிபர் சதீஷ் குமாருக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. இன்னும் 3 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மோதலில் அவர் உயிரிழந்துள்ளார். நள்ளிரவில் நடந்த இரட்டை கொலையால் திருவான்மியூர் குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.