திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர்-மேலநெம்மேலி கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணவேணி. 55 வயதான இவருக்கு, காமராஜ், கனகராஜ் ஆகிய இருமகன்கள். இவர்கள் இருவரும் வெளியூரில் வசித்து வருவதால், கிருஷ்ணவேணி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணவேணி திடீரென மாயமானது, அந்தப் பகுதி மக்களிடையே குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இவர், உறவினர்கள் வீட்டிற்கு எங்காவது சென்றிருக்கக் கூடும் என்ற கோணத்தில், இவர் மகன் கனகராஜ் பல்வேறு இடங்களிலும் விசாரித்திருக்கிறார். இதுதொடர்பாக எந்த ஒரு உறுதியான தகவலும் கிடைக்காததால், கடந்த 20-ம் தேதி வடுவூர் காவல்நிலையத்தில் கனகராஜ் புகார் அளித்திருக்கிறார். போலீஸார் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணையில் இறங்கினர்.
தன் தாய் கிருஷ்ணவேணி 6 சவரன் தங்க நகைகள் அணிந்திருந்ததாலும், தனது வீட்டில் 20 சவரன் தங்கள் நகைகள் இருந்ததாலும், நகைக்காக அவரை யாராவது கடத்தி சென்றிருக்கலாம் என காவல்துறையினரிடம் கனகராஜ் தனது சந்தேகத்தைத் தெரியப்படுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். மேலும், தீவிர விசாரணை மேற்கொண்டபோது, மேலநெம்மேலி கிராமத்தில், சித்ரா பவுர்ணமியின் போது நடைபெற்ற சாமி வீதி உலாவில் கிருஷ்ணவேணி கலந்து கொண்டிருக்கிறார். அதற்கு பிறகுதான் அவரை காணவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதையடுத்து, கிருஷ்ணவேணியின் செல்போன் நம்பரைக் கொண்டு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் செல்போன் கடைசியாக மகாதேவபட்டினம் என்ற ஊரிலிருந்தது தெரியவந்திருக்கிறது.
இதற்கிடையில், வடுவூர் அருகே முக்குளம் சாத்தனூர் வயல்வெளியில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஒரு சடலம் கிடந்திருக்கிறது. அது கிருஷ்ணவேணியின் உடல்தான் என உறுதியானது. கிருஷ்ணவேணியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மர்ம நபர்களால் கிருஷ்ணவேணி கொலை செய்யப்பட்டு… உடல் சாக்கு மூட்டையில் சாத்தனூர் வயல்வெளியில் வீசி சென்றிருப்பது தெரியவந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணவேணி மாயமான வழக்கைக் கொலை வழக்காக காவல்துறையினர் மாற்றினர். கிருஷ்ணவேணி நகைக்காகக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில்தான், திடீர் திருப்பமாக மேலநெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த தனியரசு, சின்னப்பா என்கிற ஜெயச்சந்திரன், மகாதேவபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் ஆகிய 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த மூன்று பேரும் சேர்ந்து கிருஷ்ணவேணியைக் கொலை செய்திருப்பதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாகப் பேசும் காவல்துறையினர், “கிருஷ்ணவேணி வீட்டின் அருகில்தான் இந்த 3 பேரும் வசித்து வந்துள்ளனர். கிருஷ்ணவேணிக்கும் இவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் கடந்த சித்ரா பவுர்ணமி அன்று நடந்த திருவிழாவினை பயன்படுத்தி, கிருஷ்ணவேணியிடம் இருந்த நகைகளைப் பறித்ததோடு, அவரை கொடூரமாகத் தாக்கி கொலை செய்து விட்டு, பின்னர் அவரது உடலைச் சாக்கு மூட்டையில் கட்டி பழையாறு வாய்க்காலில் வீசி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்’’ எனத் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட தனியரசு, ஜெயச்சந்திரன், மாணிக்கம் ஆகிய மூன்று பேரையும் வடுவூர் காவல்துறையினர், மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர்.