புதுடெல்லி: பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரிடம் மோசடி செய்த ரூ.200 கோடி ரூபாயில், 5.71 கோடி ரூபாயை சுகேஷ் சந்திரசேகர் ஜாக்குலினுக்கு பரிசாக கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, ஜாக்குலின் வங்கிக்கணக்கில் வைத்திருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.7 கோடியை முடக்கியுள்ளது. பண மோசடி வழக்கில் கைதாகி கடந்த 2019ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவிந்தர் சிங்கை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகக் கூறி, சிவிந்தர் சிங் மனைவி ஆதிதி சிங்கிடம் சுகேஷ் சந்திரசேகர் சுமார் 200 கோடியை மோசடி செய்ததாக ஆதிதி சிங் குற்றம் சாட்டினார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கு இரட்டை இலை சின்னத்தை வாங்கி தருவதாக சுகேஷ் சந்திரசேகர் லஞ்சம் வாங்கியதாக தகவல் வெளியானதை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் கைதாகி சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருக்கும் நிலையில் அவர் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு ஏராளமான பரிசு பொருட்கள் வாங்கி வழங்கியதாக இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஜாக்குலின் பெர்னாண்டஸ் இதை மறுத்திருந்தார். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.