நீதிமன்றங்களில் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இன்று வேலூர் மாவட்டம், வள்ளிமலை பகுதியில் தொழிலாளர் நாளை முன்னிட்டு, காட்பாடி ஊராட்சி சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர் ஒருவர், “பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று சொல்லி இருக்கிறார். நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக உள்ளூர் மொழிகளிலேயே நடத்த வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு புரியும் என்று தெரிவித்திருக்கிறார். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?” என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், “திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கை இது. நீண்ட நாட்களாக தாய்மொழியிலேயே வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்பதுதான். இதற்காக பல தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம். எனவே எப்போது சொன்னாலும் ஒரு நல்ல சகுனம் தான். அது சொன்னதோடு அல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதமரை நான் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.