பிரபல தயாரிப்பாளர் மீது இன்னொரு பெண் பாலியல் புகார்
மலையாள திரையுலகில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்பாபு மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் கூறியதும் அதைத் தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதும் கடந்த சில தினங்களாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த நடிகை விஜய்பாபு தயாரித்த ஒரு படத்தில் தான் நடித்துள்ளதாகவும் அப்போதிலிருந்து தனக்கு சில உதவிகளை செய்தவர் பின்னர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்ல விஜய்பாபுவால் இதுபோல பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்கள் துணிச்சலாக வெளியே வந்து விஜய்பாபு மீது புகார் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மேலும் ஒரு பெண், விஜய்பாபு தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “சினிமாவில் நுழையும் எண்ணத்தில் நான் இருந்தேன். அப்போது நான் வேலை பார்த்த நிறுவனம் தொடர்பாக விஜய்பாபுவை சந்திக்க நேர்ந்தது. அப்போது எனக்கு இருந்த சில பிரச்சனைகளை அவர் தீர்த்து வைக்க அவர் உதவினார். அதேசமயம் அந்த சந்திப்பின்போது தனி அறையில் வைத்து என்னை முத்தமிட முயற்சி செய்தார். ஆனால் அதிர்ச்சியடைந்த நான் எனக்கு இதில் விருப்பமில்லை என்று கூறி அறையை விட்டு வெளியேறி விட்டேன்..
பார்த்துப் பேசிய 30 நிமிடங்களிலேயே அவர் ஒரு பெண்ணிடம் இந்த அளவுக்கு துணிச்சலாக அத்துமீறுகிறார் என்றால் இதற்கு முன் அவர் மீது புகார் அளித்துள்ள பெண்ணின் நிலைமையை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. அந்தப் பெண்ணை பற்றி சோசியல் மீடியாவில் பலர் தரக்குறைவாக பேசி வருகிறார்கள். ஆனால் அவரது வலி எனக்கு நன்றாக தெரியும். அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்காகவே இந்த உண்மையை தற்போது வெளியே கூறியுள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே நடிகை கொடுத்த புகாரில் விஜய்பாபு மீது போலீசார் வழக்கு பதிந்துள்ள நிலையில், அவர் தனக்கு முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதேசமயம் தற்போது கோடைகால விடுமுறை என்பதால் மே-16 க்கு பிறகு தான் அவரது முன்ஜாமீன் மனு பரிசீலனைக்கு வரும் சூழல் நிலவுகிறது. அதேசமயம் தற்போது விஜய்பாபு துபாயில் இருப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது விஜய்பாபு தானாகவே வந்து சரண் அடைந்து விடுவது தான் அவருக்கு நல்லது என கூறியுள்ளார்.