மழைக்கால நிவாரண நிதிக்கான அரசாணை வெளியிட வேண்டும்; சிவப்பு மையில் கை பதித்த தொழிலாளர்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தித் தொழில் நடந்து வருகிறது. இந்தத் தொழிலில் சுமார் 20,000 பேர் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதத்தில் பாதியில் வரையிலும் உப்பு உற்பத்தி நடக்கிறது. ஆண்டுக்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் டன் வரையிலும் உப்பு உற்பத்தி நடக்கிறது. தமிழகத்திலேயே உப்பு உற்பத்தி அதிகம் நடைபெறும் மாவட்டம் இது. 6 மாதங்கள் மட்டுமே நடைபெறும் இந்தத் தொழில், மழைக் காலங்களில் அடியோடு நிறுத்தப்பட்டுவிடும். இதனால், உப்பளத் தொழிலாளர்கள் 6 மாதங்கள் வேலை இல்லாமல் இருக்கும் நிலை நிலவிகிறது.

மே தின கொண்டாட்டம்

அதனால், மழைக்கால நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என உப்பளத் தொழிலாளர்கள் பல கட்டப் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5,000 வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. இதனையடுத்து தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும் சொன்னபடியே சட்டமன்றத்திலும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அதற்கான அரசாணையை தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை.

தமிழக அரசு இனியும் தாமதிக்காது உடப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தக் கோரி தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்கள், உலகத் தொழிலாளர் தினமான இன்று, கோரிக்கை அறிவிப்பு போர்டில் உப்பளத் தொழிலாளர்கள் கை அச்சு பதிக்கும் நிகழ்வு நடந்தது. இதில், உப்பளத் தொழிலாளர்கள் சிவப்பு நிற மையினால் தங்களின் கை அச்சுகளைப் பதித்தனர். இதுகுறித்து அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.

“எங்களது கோரிக்கையை ஏற்று மழைக்கால நிவாரண நிதியாக ரூ.5,000 வழங்கிட உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிவப்பு மையில் கை பதித்த தொழிலாளர்கள்

இதற்கான அரசாணையை தமிழக அரசு விரைவில் வெளியிட வேண்டும். இந்தக் கோரிக்கை அடங்கிய மனுவில் உப்பளத் தொழிலாளர்களின் கையெழுத்து பெற்று முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளோம். இந்த உதவித்தொகை நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி உப்பளத்தில் பணி செய்கின்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையாகக் கிடைக்க வேண்டும். உப்பளங்களில் குடிநீர், கழிப்பறை, குழந்தைகள் காப்பகம், நடமாடும் மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.