Senthil Balaji explains EPS electricity resistance issue: சேலத்தில் தனது இல்லத்திலும் இரண்டு மணி நேரமாக மின்வெட்டு ஏற்பட்டதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. கோடைக்காலத்தில் அதிக பயன்பாடு மற்றும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்த மின் தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், மத்திய தொகுப்பில் இருந்து போதிய மின்சாரம் கிடைக்காததே இதற்கு காரணம் என தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது.
இந்தநிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எனது வீட்டிலும் இன்று காலை 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. அனைவருமே மின்சாரத்தை நம்பித்தான் இருக்கிறோம். வீட்டில் மின்சாரம் இல்லாவிட்டால் இரவில் யாரும் தூங்க முடியாது. அதிலும் நகர் பகுதிகளில் மின்சாரம் இல்லையென்றால் தூங்கவே முடியாது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாகத்தான் மின் வெட்டு ஏற்படுவதாக தெரிவித்தவர், மத்திய அரசிடம் பேசி உரிய வகையில் நிலக்கரி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்: சந்திக்க விடாமல் தடுத்ததாக போலீஸ் மீது குற்றச்சாட்டு; பாலபாரதியிடம் போனில் விசாரித்த ஸ்டாலின்
இந்தநிலையில் எதிர்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வை டிவி பார்த்து தெரிந்துக்கொண்ட எதிர்கட்சி தலைவருக்கு, சேலம் நெடுஞ்சாலைநகரில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கும் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெற்ற பணிகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். நடைப்பயிற்சியாக நாளை அவரே அங்கு சென்று நடந்த பணிகளை அறிந்துக்கொள்ளலாம். அழைத்து செல்ல நான் தயார். இன்று காலை, முன்னறிவிப்போடு கந்தம்பட்டி 110/22KV துணை மின் நிலையத்தில் நிறுவப்பட்ட புது மின்மாற்றிகளுக்கு ஜம்பர் கனக்சன் தருவதற்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. கூடுதல் மின்மாற்றிகளால் சேலம் நகர பகுதிகளுக்கு சீரான மின்சாரம் கிடைக்கும். கூடுதல் மின் பளுவை எதிர்கொள்ள இயலும். நன்றி.” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.