கரூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். பழைய அரசு மருத்துவக் கல்லூரி வாளகத்தை மீண்டும் அரசு தலைமை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை, நேரில் ஆய்வு செய்தார். பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி,
“தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழகத்தில் மின்வெட்டு குறித்து உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை அளித்து வருகிறார். அவர் பரப்பும் பொய் பிரசாரம் குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில், மீண்டும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பா.ஜ.க மாநிலத் தலைவர் தெரிவிக்கும்போது, செய்தியாளர்கள் எனது விளக்கத்தை கொண்டு கேள்வி எழுப்ப வேண்டும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் எந்தெந்த மாநிலங்களில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேட்டறிய வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறை இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் ஏற்பட்டுள்ளபோது, தமிழகத்தில் மட்டும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை பரப்பி வருகிறார். தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளது. பற்றாக்குறையை ஈடுசெய்ய மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பற்றாக்குறை இருந்தபோதும், சீரான மின் விநியோகம் தமிழகத்தில் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் மின் தடை குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வர் காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளை தமிழகத்தில் மின்வெட்டு குறித்து மேற்பார்வையிட்டு வருகிறார். கடந்த ஐந்து நாள்களாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 15 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், உற்பத்தியே நடைபெறவில்லை எனக் கூறுகின்றனர். இரண்டு நாள்கள் மட்டுமே குறைவான கையிருப்பை வைத்து உற்பத்தி செய்துள்ளோம். கடந்த ஏப்ரல் 23-ம் தேதி சனிக்கிழமைக்குப் பிறகு, தமிழகத்தில் எங்காவது மின்வெட்டு இருந்தது என்றால் கேள்வி எழுப்பலாம். சில பத்திரிகைகளில்கூட திடீர் பழுதின் காரணமாகவும், பராமரிப்பு காரணமாகவும் ஏற்படக்கூடிய மின் தடைகளை, ‘மின்வெட்டு’ என்று செய்தி வெளியிட்டு வருகின்றனர். சமூக வலைதளத்தில் தவறான தகவல் பகிர பட்டால்கூட அதனை செய்தியாக வெளியிட்டு வருகின்றனர். அதனையும் அரசு கண்காணித்து வருகிறது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் மின்தடை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் தமிழகத்தின் மின் தேவையை சமாளித்துக் கொள்வதற்கு புதிய மின் உற்பத்தி திட்டங்கள் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 29-ம் தேதி தமிழக வரலாற்றில் மின்சார வாரியத்தில் அதிகபட்ச மின் நுகர்வும், அதிகபட்ச பற்றாக்குறையும் பதிவாகியுள்ளது. அந்த அதிகபட்ச மின் நுகர்வையும், பற்றாக்குறையிலும் எந்தவித தடங்கலுமின்றி சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின் வாரியத்தில் டெண்டர் முறைகேடு என தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது என சமூக வலைதளத்தில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். டெண்டர் முறையில் பங்கேற்கும் நிறுவனங்கள் குறைந்த அளவு விலையை அவர்களே நிர்ணயித்து பங்கேற்பதால் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. எந்தவிதமான ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக டெண்டர் நடைபெறுகிறது” என்றார்.