திருவனந்தபுரம்: முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று கேரளாவின் மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் கோட்டயம் மாவட்டம், பூஞ்சார் பகுதியை சேர்ந்தவர் பி.சி. ஜார்ஜ் (70). காங்கிரஸில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர் பல்வேறு கட்சிகளுக்கு மாறினார். 2019-ல் கேரள ஜனபக்சம்என்ற கட்சியை தொடங்கி, கடந்தமக்களவைத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டார். பூஞ்சார் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 7 முறைஎம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் கேரளாவின் மூத்த அரசியல் தலைவராக உள்ளார்.
திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அனந்தபுரி இந்து மகா சம்மேளன மாநாட்டில் பி.சி.ஜார்ஜ் பங்கேற்று தொடக்க உரையாற்றி பேசியதாவது:
“முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். இதன்மூலம் மற்ற சமுதாயத்தின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, முஸ்லிம்களின் மக்கள் தொகையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற சதி நடக்கிறது.
இந்து, கிறிஸ்தவ பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் குடும்ப கட்டுப்பாட்டை கடைபிடிக்கின்றனர். ஆனால் முஸ்லிம் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு போட்டியாக இந்து, கிறிஸ்தவ பெண்களும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இப்போதே இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும்.
மற்ற சமுதாய மக்கள் அதிகம்வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம் வியாபாரிகள் தங்களது நிறுவனங்களை தொடங்கி பொருளாதாரரீதியாக ஆதிக்கம் செலுத்த முயற்சிசெய்கின்றனர். உணவு வகைகளில் முஸ்லிம் போதகர்கள் 3 முறை துப்புகின்றனர். அந்த உணவு வகைகள் மக்களுக்கு பரிமாறப்படுகிறது. அவர்கள் துப்பிய உணவு வகைகளை நாம் ஏன் சாப்பிட வேண்டும்.அவற்றை புறக்கணிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.
பி.சி. ஜார்ஜின் கருத்து கேரள அரசியலில் பெரும் விவாத பொருளாகி உள்ளது. அவருக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் சார்பில் காவல் துறை, முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்திய முஸ்லிம் லீக் தலைவர்பி.கே. பெரோஸ், கேரள காவல்துறை தலைவரிடம் அளித்துள்ள புகாரில், மத கலவரத்தை தூண்டும்பி.சி.ஜார்ஜை கைது செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களும் ஜார்ஜின் கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.