உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 70வது நாளை நெருங்கியுள்ளது. கிழக்கு உக்ரைன் மற்றும் தெற்கு பகுதிகளில் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தலைநகர் கிவ்விலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ரஷிய படைகளின் தாக்குதலில் 200 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ரஷிய ராணுவ தரப்பில் கூறும்போது, “நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் உக்ரைனின் 17 ராணுவ கட்டமைப்புகள், உயர் துல்லிய ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டன. ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகள் சேமித்து வைக்கும் கிடங்கும் அழிக்கப்பட்டது.
விமானப்படை தாக்குதல்களில் 200-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர். 23 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளது.
உக்ரைனின் 3வது பெரிய நகரமான ஒடேசாவில் உள்ள விமான நிலையம் மீது ரஷியா ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதில் விமான ஓடுதளத்தின் பாதை முற்றிலும் சேதமடைந்தது.
தலைநகர் கிவ் அருகே உள்ள புச்சா நகரில் பொது மக்கள் பலர் ரஷிய படைகளால் கொல்லப்பட்டனர் என்று உக்ரைன் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் 3 பேரின் உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் கூறும்போது, கொல்லப்பட்டவர்களின் கைகள் கட்டப்படிருந்தன. துணியால் கண்கள் மற்றும் வாய் மூடப்பட்டு இருந்தது. அவர்களை சித்ரவதை செய்து காது பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கொன்று உள்ளனர் என்றனர்.
ரஷிய படைகள் கைப்பற்றியுள்ள மரியுபோல் நகரில் எக்கு ஆலையில் உக்ரைன் வீரர்கள், பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் சரணடைய மறுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆலையில் இருந்து குழந்தைகள் உள்பட 20 பொதுமக்கள் வெளியேறி வடமேற்கில் 225 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சபோரிஜியா நகருக்கு சென்று விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்..
ஸ்வீடனை மிரட்டும் ரஷியா- வான்வெளியில் அத்துமீறி பறந்த போர் விமானம்