உக்ரைன் தலைநகரான கிவ் பகுதியில் 1982-ல் சோவியத் யூனியனின் 60 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்த ‘People’s Friendship Arch’ எனும் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. இது ரஷ்ய-உக்ரேனிய நட்பைக் குறிக்கும் வகையில் உக்ரேனிய தொழிலாளியும் ரஷ்ய தொழிலாளியும் ஒன்றாகச் சேர்ந்து நிற்கும் சிலையாகும். தற்போது ரஷ்யா, உக்ரைன்மீது தாக்குதல் நடத்தி ஆயிரக்காண உக்ரைன் மக்களை கொன்று குவித்து வருகிறது. இதனால் உக்ரைன்- ரஷ்யா இடையான நட்பு முறிவடைந்துவிட்டது என்று உக்ரைனிய அதிகாரிகள் உக்ரைன் தலைநகரில் அமைத்துள்ள ‘People’s Friendship Arch’ நினைவுச் சின்னத்தை அகற்றியுள்ளனர்.
இது குறித்து கூறிய கீவ் நகர் மேயர் விட்டலி கிளிட்ச்கோ(Vitaly Klitschko), “இந்த நட்பு என்னவென்று இப்போது நாம் காண்கிறோம். உக்ரேனிய நகரங்களின் அழிவு; பல்லாயிரக்கணக்கான, அமைதியான மக்ககளின் உயிரிழப்பு. இந்த நினைவுச்சின்னத்திற்கு இப்போது முற்றிலும் மாறுபட்ட அர்த்தம் இருப்பதாக நான் நம்புகிறேன்.” என்று கூறினார்.
அதே சமயம் அகற்றப்பட்ட அந்த சிலை அருகே இரண்டு சிறுவர்கள் கைகோர்த்து நிற்கும் காட்சி காண்போரை நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் ‘அடுத்த தலைமுறையாவது ஒன்றாக அமைதியாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும், போரை நிறுத்துங்கள்’ எனப் பதிவிட்டு வருகின்றனர்.