வெப்ப அலைகள்: 122 ஆண்டுகளில் இல்லாத அளவை எட்டியுள்ளது; என்ன செய்யப் போகிறது இந்தியா?!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாகவே சராசரி வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டாக உச்சம் தொட்டிருக்கிறது. ஏப்ரலின் சராசரி வெப்பநிலையைவிட இது 10 டிகிரி ஃபாரன்ஹீட் கூடுதல் என்கின்றன தரவுகள். டெல்லியைப் பொறுத்தவரை கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஏப்ரலில் வெப்பம் அதிகம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

வெப்பநிலை

மார்ச் மாதம் இந்தியாவின் சராசரி வெப்பநிலை 92 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருந்தது. கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது மிக அதிகமான வெப்பநிலை என்று வர்ணிக்கும் ஆராய்ச்சியாளர்கள், 2022ம் ஆண்டின் மார்ச் மாதம் தான் இந்திய வரலாற்றிலேயே அதிக வெப்பநிலை கொண்ட மார்ச் என்கிறார்கள்.

வெப்பம் காரணமாக மேற்கு வங்கத்தில் திட்டமிட்டப்பட்ட தேதிக்கு முன்னதாகவே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தீ சார்ந்த நிகழ்வுகள் (Fire incidents) வெப்பத்தால் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் “பலகீனமானவர்கள், நோயுற்றவர்கள், முதியவர்கள் வெயில் நேரத்தில் வெளியில் செல்லவேண்டாம்” என்பது போன்ற எச்சரிக்கைகள் வரத் தொடங்கிவிட்டன. வெப்பத்தால் அதிகரிக்கும் பிரச்னைகளை சமாளிக்க மருத்துவமனைகளுக்கு சிறப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிராவின் விதர்பா ஆகிய பகுதிகளில் அதிகாரபூர்வமாகவே வெப்பத்துக்கான “ஆரஞ்ச் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து

பொதுவாக கோடைகாலத்தின்போது உலகின் அதி வெப்பம் மிகுந்த நகரங்களின் டாப் 10 பட்டியலில் இந்திய நகரங்களின் பெயர்கள் ஆங்காங்கே தென்படுவது வழக்கம் தான். ஆனால் இந்த ஆண்டு, டாப் 10ல் பெரும்பாலான இடங்களை இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த நகரங்கள் பிடித்திருக்கின்றன. தெற்கு ஆசியாவை வாட்டிவரும் வெப்பத்துக்கு இதுவே சான்று.

வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருப்பதால், கோதுமை உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவை வறுத்துக்கொண்டிருக்கும் வெப்ப அலைகளின் (Heat waves) பாதிப்புகளைப் பற்றிய ஒரு சிறு பட்டியல் இது. இவை உச்ச நிகழ்வுகள் மற்றும் தரவுகள் மட்டுமே, தனிப்பட்ட நகரங்கள் மற்றும் மாநிலங்களில் வெப்ப அலைகளின் பாதிப்பு இன்னும் தீவிரமானதாக இருக்கிறது.

வெப்ப அலை

பொதுவாக 104 டிகிரி செல்சியஸுக்கு மேல் சராசரி வெப்பநிலை தொடர்ந்து நீடித்தால், அது வெப்பநிலை என்று வகைப்படுத்தப்படுகிறது. “வெப்ப அலைகளில் காணப்படும் உச்சகட்ட வெப்பநிலை பற்றித்தான் பலரும் கவலைப்படுகிறார்கள். ஆனால் இந்தியாவில் இந்த ஆண்டு வெப்ப அலைகளைப் பொறுத்தவரை, வெப்ப அலையின் காலகட்டம்தான் மிகவும் கவலையளிக்கிறது” என்கிறார்கள் காலநிலை விஞ்ஞானிகள். பொதுவாக இந்தியாவில்மே மாதத்தில்தான் வெப்ப அலைகள் தோன்றுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி முதலே வெப்ப அலைகள் வரத் தொடங்கிவிட்டன. ஆகவே இது இந்தியாவின் மிக நீண்ட, அதிக வெப்பநிலை கொண்ட கோடைகாலமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மேற்கத்திய கலக்கம் (Western disturbance) என்ற காலநிலை நிகழ்வு, மழையை ஏற்படுத்தி வெப்பநிலையை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் அந்த நிகழ்வு பலவீனமானதாகவே இருந்தது. மேலும், எதிர்ச்சூறாவளி (Anti-cyclone) விளைவு ஏற்பட்டிருப்பதால், வெப்பம் நிறைந்த, மழை குறைவான பருவகாலம் தொடர்ந்து நீடிக்கிறது. இதுபோன்ற சமீபத்திய நிகழ்வுகளே இந்த வெப்ப அலைகளுக்குக் காரணம் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். அதை ஏற்றுக்கொள்ளும் காலநிலை வல்லுநர்களோ, இதுபோன்ற காலநிலை நிகழ்வுகள் பிறழ்வதற்கும் காலநிலை மாற்றத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள்.

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டுக் குழுமம், காலநிலை மாற்றத்தால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றாக அதீத வெப்பநிலையை ஏற்கெனவே கணித்திருந்தது. சமீபத்தில் வெளிவந்த ஒரு ஆராய்ச்சியில், காலநிலை மாற்றத்துக்கும் வெப்ப அலைகள் எத்தனை முறை நிகழ்கின்றன என்பதற்கும் தொடர்பு உண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தீவிரமான, நீண்ட வெப்ப அலைகள் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வழக்கமாக வரும் என்றும், காலநிலை மாற்றத்தால் அந்த இடைவெளி 4 ஆண்டுகளாகக் குறைந்துவிட்டது என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் 2015ம் ஆண்டு ஏற்பட்ட தீவிர வெப்ப அலைகளின் பாதிப்புகள் பலருக்கு நினைவிருக்கலாம்.

காலநிலை நிகழ்வுகளின் பிறழ்வு, காலநிலை மாற்றம் ஆகியவற்றோடு, நகரங்களில் காணப்படும் வெப்ப அலையின் தீவிரத்துக்கு வேறு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. கான்கிரீட் நிறைந்த, மரங்கள் குறைவான நகரப் பகுதிகளில் ஏற்படும் வெப்பத் தீவு விளைவு (Urban heat island effect), நகரங்களின் மாசுபட்ட காற்றால் அதிகமாக வெப்பம் உறிஞ்சப்படுவது ஆகியவற்றால் சராசரி வெப்பநிலை மேலும் அதிகரிக்கிறது.

மாசு

வெப்ப அலைகளால் மிக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கிற ஒடுக்கப்பட்ட மக்கள்தான் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. வெப்பத்திலிருந்து தப்பிக்க வீட்டில் ஏ.சி போட்டுக்கொள்வது, குளிரூட்டப்பட்ட வாகனங்களில் பயணிப்பது, குளிரூட்டப்பட்ட அலுவலக அறைகளில் வேலை செய்வது, வீட்டைச் சுற்றிலும் மரங்களும் தோட்டங்களும் அமைத்துக்கொள்வது, நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் அதீத வெப்பத்தால் வரும் பிற நோய்களுக்காக உடனடியாக மருத்துவமனையை அணுகிப் பயன்பெறுவது போன்ற எந்த வசதிகளும் இவர்களுக்குக் கிடையாது. ஆகவே மற்ற சூழல்சார் இடர்ப்பாடுகளைப் போலவே வெப்ப அலைகளுக்கான தீர்வுகள்/சமாளிக்கும் உத்திகளைப் பேசும்போது சூழல்சார் சமூக நீதியையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தி வெப்ப அலைகளைக் குறைக்கும் அதே நேரத்தில், வெப்ப அலைகளால் ஏற்படும் சூழல்சார் சமூக அநீதியைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்பதையும் பட்டியலிட்டிருக்கிறார் ஆய்வாளர் ருசீ குமார். பசுமை நிறைந்த பொதுத்தளங்கள்/பொது இடங்களை அனைவரும் அணுகிப் பயன்படுத்துமாறு செய்வது, சூழலை பாதிக்காத கட்டுமானங்கள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்வது, கட்டுமானத்தொழில், விவசாயம் ஆகியவற்றில் இருப்பவர்களுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் வெப்ப அலைகளை ஒட்டிய மருத்துவ காப்பீடு அல்லது நிவாரண நிதி தருவது போன்றவற்றை அவர் பரிந்துரைக்கிறார்.

வெயில்

இத்தனைக்கும் மத்தியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்துவரும் தொடர் மின்வெட்டு, இந்த வெப்ப அலைகளைத் தாக்குப்பிடித்து அன்றாடத்தை சமாளிப்பதை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.

இந்த ஆண்டின் அக்னி நட்சத்திரம் வேறு இன்னமும் பாக்கியிருக்கிறது.

அக்கினி நட்சத்திரம்

வெப்ப அலைகளை எதிர்கொள்ள உடனடி செயல்பாடுகளை விவாதிக்கும் அதே நேரம், அடுத்தடுத்த ஆண்டுகளில் வெப்ப அலைகள் நம்மைத் தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதையும் பேசவேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.