இலங்கையில் இம்முறையில் முக்கிய தலைவர்களின்றி ஆளும் கட்சியின் மே தின பேரணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பேரணியில் 500 பேர் வரையிலான ஆதரவாளர்கள் மட்டுமே பங்கேற்றதாக தெரிய வருகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மே தின பேரணி இன்று பிற்பகல் நுகேகொட ஆனந்த சமரகோன் வெளிப்புற திரையரங்கில் நடைபெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரின் பங்கேற்பின்றி இந்த மே தினக் கூட்டம் நடைபெற்றது.
எனினும், மே தினக் கூட்டத்திற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரே இந்த பேரணியில் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, ரமேஷ் பத்திரன, விதுர விக்கிரமநாயக்க உள்ளிட்ட சில அமைச்சர்கள் மாத்திரமே கலந்து கொண்டுள்ளதாக தொழில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷர்களுக்கு எதிராக நாட்டு மக்கள் தீவிர போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மக்கள் முன்னிலையில் ராஜபக்ஷர்கள் தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியில் வருவதை முற்றாக தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மிகவும் சர்ச்சைக்குரிய நபரான பசில் ராஜபக்ச தலைமறைவான முறையில் வெளியில் சென்று வருவதாக தெரிய வருகிறது.