புதுடில்லி : இந்தியாவின் வட மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஏப்ரலில், 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பம் நிலவியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுதும் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய டைரக்டர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மெகாபத்ரா கூறியதாவது:கடந்த ஏப்ரலில் நாட்டின் வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதிகளில், 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சராசரியாக அதிகபட்ச வெப்ப நிலை இருந்து வந்தது.குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் வழக்கத்தை விட கடுமையான வெப்பம் நிலவியது.
தேசிய அளவில் ஏப்ரலில் சராசரியாக, 35.05 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. இது, 122 ஆண்டுகளில் நான்காவது உச்சபட்ச வெப்ப நிலை. ஏப்., இறுதியில் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 45 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவியது.நடப்பு மே மாதம், சராசரி மழை பொழிவு, வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
அதேசமயம் வடகிழக்கு, வடமேற்கு மற்றும் தென்கிழக்கு தீபகற்ப பகுதிகளில் வழக்கத்தை விட மழைபொழிவு குறைவாக இருக்கும். மழை குறைவால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பம் அதிகமாக இருந்தது.இவ்வாறு அவர்கூறினார்.
Advertisement