மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், வேலூரில் இருந்து சென்னைக்கு 94 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தினகரன் என்ற இளைஞர், சில நாட்களுக்கு முன் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில், அவருக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று காலை அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் ஒப்புதல் அளித்தனர்.
அவரது சிறுநீரகம், நுரையீரல் அதே மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது. மேலும், இதயத்தை சென்னை அப்பல்லோ மருத்துவமனை நோயாளிக்கு தானமாக அளிக்க தமிழக உடல் உறுப்பு ஆணையம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மதியம் 3 மணியளவில் இதயத்தை பிரத்யேக பெட்டியில் வைத்து ஆம்புலன்சில் அனுப்பப்பட்டது. வேல்முருகன் என்பவர் ஆம்புலன்சை ஓட்டிய நிலையில், வேலூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்தை கட்டுப்படுத்திய போலீசார் வாகனம் வேகமாக செல்ல வழி ஏற்படுத்தினர். மாலை 4.30 மணியளவில் சென்னை வந்த இதயம், 41 வயது ஆணுக்கு பொருத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.