புதுடில்லி : கொரோனாவுக்கு எதிராக, ரஷ்ய தயாரிப்பான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, முதல் ‘டோஸ்’ தடுப்பூசியையே, ‘பூஸ்டர் டோஸ்’ எனப்படும் முன்னெச்சரிக்கை டோசாக வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது நம் நாட்டில் ‘கோவாக்சின், கோவிஷீல்டு’ ஆகிய தடுப்பூசிகள் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் பல்வேறு நாடுகளின் தடுப்பூசிகளை பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி வழங்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதே நேரத்தில் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசி போட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.ஸ்புட்னிக் வி தடுப்பூசி இரண்டு தவணைகளாக, 21 – 30 நாட்கள் இடைவெளியில் வழங்கப்படுகின்றன.
முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ், வெவ்வேறு மூலப் பொருட்களை உடையவை. அதனால், முன்னெச்சரிக்கை டோஸ் குறித்து குழப்பம் இருந்தது.இந்நிலையில், ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோசையே, முன்னெச்சரிக்கை டோசாக வழங்குவதற்கு, தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.அரசின் புள்ளிவிபரங்களின்படி, நம் நாட்டில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செலுத்தப்பட்டுள்ளது.
Advertisement