ஸ்டாக்ஹோம்:
உக்ரைனை தொடர்ந்து ஸ்வீடன் மற்றும் அதன் அண்டை நாடான பின்லாந்து ஆகியவை நேட்டோ அமைப்பில் உறுப்பினராக முயற்சி செய்து வருகின்றன.
இதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நடவடிக்கை ஐரோப்பிய யூனியன் பகுதியில் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்று ரஷிய அதிபரின் கிரம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஸ்வீடன் நடவடிக்கை கூட்டணி மோதலை நோக்கிய செல்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க கூடாது என்றும் ஸ்வீடனை ரஷியா வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில் ரஷிய போர் விமானம் அத்துமீறி தங்கள் வான்வெளியில் நுழைந்ததாக ஸ்வீடன் தெரிவித்துள்ளது. போர்ன்ஹோல்ம் தீவு அருகே பால்டிக் கடலில் இந்த அத்துமீறல் நடைபெற்றது.
ஸ்வீடன் வான்வெளிக்குள் ரஷிய போர் விமானம் நுழைந்தவுடன், ஸ்வீடன் விமானப்படை விமானங்கள் அதைத் துரத்தியதாகவும் ரஷிய விமானத்தை புகைப்படம் எடுத்துள்ளதாகவும் ஸ்வீடன் பாதுகாப்பு மந்திரி பீட்டர் ஹல்ட்க்விஸ்ட் தெரிவித்துள்ளார்.
இந்த அத்துமீறல் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், தொழில்முறைக்கு புறம்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில் நான்கு ரஷிய போர் விமானங்கள் பால்டிக் கடல் மீது பறந்தவாறு ஸ்வீடன் வான்வெளிக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்…
அதிபர் மாளிகையை நெருங்கி வந்தனர்- ரஷிய படையிடம் சிக்காமல் தப்பிய ஜெலன்ஸ்கி