விற்பனையில் டல் அடிக்கும் கார்கள் நின்று போனால் பரவாயில்லை; சேல்ஸில் சொல்லியடிக்கும் கார்கள்கூட திடீரென்று தயாரிப்பு நின்று போயிருக்கும். ஹூண்டாயின் இயான் அப்படிப்பட்ட கார்தான். நிஜமாகவே ஹூண்டாய்க்கு ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்த கார், இயான். முதன் முதலில் கார் வாங்குபவர்கள் ஆல்ட்டோவுக்குப் பிறகு… இல்லை இல்லை; இயானுக்கு அப்புறம்தான் ஆல்ட்டோவையே பலர் செக் லிஸ்ட்டில் வைத்திருந்தார்கள்.
அப்படிப்பட்ட இயான், 2019 செப்டம்பர் மாதம் திடீரென்று நிறுத்தப்பட்டது என்று ஹூண்டாய் சொன்னபோது வருத்தமாகவே இருந்தது. மத்திய அரசின் பாதுகாப்பு ரெகுலேஷன்கள் மற்றும் BS-6 நார்ம்ஸ்களுடன் ஒத்து வரவில்லை என்பதால், இயானின் தயாரிப்பை நிறுத்துவதாகச் சொன்னது ஹூண்டாய்.
இயான் வாடிக்கையாளர்கள், இப்போதும் தங்கள் காரை ஸ்விஃப்ட் போன்ற கார்களுக்கு இணையாக மாடிஃபை செய்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இயான் காரை, பழைய மார்க்கெட்டில் வாங்கலாமா? என்னென்ன கவனிக்கணும்?
வரலாறு
ஹூண்டாய் முதன் முதலில் 2011–ல்தான் என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் தனது இயானை அறிமுகப்படுத்தியது. பார்த்தவுடன் எல்லோருக்கும் பிடித்துப் போகும் மாடர்னான ஸ்டைலில், செல்லமான, காம்பேக்ட்டான டிசைனில் கிச்சென இருந்தது இயான். என்ட்ரி லெவல் என்பதால், 3.5 மீட்டருக்குள் மிகவும் அளவாக, 13 இன்ச் வீல்களுடன் சின்ன அளவுகளில் இருக்கும் இயான். சான்ட்ரோவை நினைவுபடுத்துவதுபோல் டால் பாய் டிசைனிலேயே இதைக் கொண்டு வந்தது ஹூண்டாய்.
மாடல் 2014 – 2016விலை சுமார் 2 லட்சம்இன்ஜின்1 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல்பவர்69bhpமைலேஜ்18 – 20 கிமீபூட் ஸ்பேஸ்211 லிட்டர்ப்ளஸ் எல்பிஜி, மைலேஜ், முதல் முறை ஓட்டப் பழகுபவர்கள்கூட எளிதாக ஓட்ட முடிவது, போதுமான வசதிகள், தரம்மைனஸ்இன்ஜின் NVH தரம், ஸ்டீயரிங் பம்ப் குறைபாடு, கியர் மற்றும் சஸ்பென்ஷன் வியர், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இல்லை
ஒரு விஷயம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 7 ஆண்டு வரலாற்றில் ஒரு தடவைகூட ஃபேஸ்லிஃப்ட் ஆகாத கார் இயான்தான். ஆனால், சின்னச் சின்ன அப்டேட்டகள், எக்யூப்மென்ட் லிஸ்ட் மற்றும் ட்ரிம்களில் இயான் வந்து கொண்டுதான் இருந்தது.
எந்த வேரியன்ட்… என்ன வசதி?
2011–ல் மொத்தம் 6 வேரியன்ட்களில் லாஞ்ச் ஆனது இயான். இதில் D-Lite என்பதுதான் பேஸ் வேரியன்ட். இதில் வசதிகள் என்றும் பெரிதாக எதுவும் சொல்ல முடியாது. பழைய கார் மார்க்கெட்டில் உங்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ் – இந்த பேஸ் வேரியன்ட்கள் கிடைத்தால் நன்றாக பேரம் பேசுங்கள். காரணம், இது விலைக்கேற்ற தரமாக இருக்காது.
அப்படியென்றால், ஹூண்டாய் இயான் தரமில்லாத காரா என்றால்… அங்கேதான் ஹூண்டாய் சொல்லியடிக்கிறது. இன்னும் சில ஆயிரங்கள் எக்ஸ்ட்ரா செலவு செய்து Magna அல்லது Magna(O) வேரியன்ட்கள் கிடைத்தால் விடாதீர்கள். இதன் டாப் எண்டான மேக்னா ப்ளஸ்ஸின் வசதிகளைக் கவனியுங்கள்.
முன் பக்க பவர் விண்டோக்கள், டிரைவருக்கான ஒரு காற்றுப்பை, சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், முன் பக்கப் பனிவிளக்குகள், குழந்தைகளுக்கான சேஃப்டி லாக், இரண்டு ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டத்துடன் சிடி ப்ளேயர், அந்தக் காலத்துக்கு ஏற்ற வசதிகளான யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் போர்ட்டுகள், அழகுக்காக பாடி கலர் பம்பர்கள் என்று கலக்கி எடுக்கும்.
நீங்கள் எடுக்கப் போகும் மாடலின் ஸ்டீயரிங் வீலில் சில்வர் வேலைப்பாடுகள் இருந்தால், டாப் எண்டான Magna Plus என்று அறிந்து கொள்ளுங்கள். மேற்கூறிய வசதிகள் எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே Magna (O) என்றால், காற்றுப்பை, பனிவிளக்குகள், கீலெஸ் என்ட்ரி போன்ற சில முக்கியமான வசதிகள் மட்டும் மிஸ் ஆகும். இரண்டுக்கும் சில ஆயிரங்கள் மட்டுமே வித்தியாசம் இருக்கும். ஒரு சின்ன என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் காரில் இத்தனை வசதிகள் இருப்பது செம!
இன்ஜின்
இயான் ஒரு சின்ன கார். அதனால், இதில் பெர்ஃபாமன்ஸையெல்லாம் பெரிதாக எதிர்பார்க்கக் கூடாது. இதிலிருப்பது 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின். ஆரம்பத்தில் இதில் இருந்தது 800 சிசி, பெட்ரோல் இன்ஜின். இதன் பவர் வெறும் 55bhpதான். இந்தக் குட்டி காரை இழுத்துப் போக இந்த பவர் சூப்பராக இல்லை; ரொம்பவும் சுமார் ரகமாகத்தான் இருந்தது. இதன் டார்க்கும் 7.6kgmதான். ‘‘இவ்வளவுதான் இதில் பிக்–அப் கிடைக்குமா’’ என்று முதல் முறை கார் வாங்கியவர்கள்கூட அதிருப்தி அடைந்திருக்கிறார்கள் இயானில்.
அதன் பிறகே இந்தக் குறையைச் சரிக்கட்டியது ஹூண்டாய். இதில் 1.0லிட்டர் ஆப்ஷன் கொண்டு வந்தார்கள். 998 சிசி இன்ஜின் கொண்ட இந்த பெட்ரோல் இன்ஜினின் பவர், 69bhp ஆக உயர்த்தப்பட்டது. இப்போது அந்தக் குறை தெரியவில்லை. டார்க்கையும் கணிசமாக உயர்த்தி இருந்தார்கள். 9.4kgm டார்க், சிட்டி டிராஃபிக்கில் கிளம்பி வர மிகவும் ஏதுவாக இருந்தது. ஆனாலும், பெர்ஃபாமன்ஸ் விரும்பிகள் ‘இன்னும் இன்னும்’ என்று கை நீட்டினார்கள். அதற்குள் இயானை நிறுத்திவிட்டது ஹூண்டாய்.
இயானின் ப்ளஸ் – அதன் மைலேஜ். 800சிசிக்கு இணையாக இதன் 1.0லிட்டர் இன்ஜினும் சிட்டிக்குள் 17.5 கிமீ மைலேஜ் தந்தது. இதில் இன்னொரு ஆப்ஷனும் கொடுத்து வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டது ஹூண்டாய். அது எல்பிஜி வேரியன்ட். இதன் 1.0லிட்டர் இன்ஜினில் ஃபேக்டரி ஃபிட்டட் ஆக வந்த எல்பிஜி வேரியன்ட்டுக்கு இப்போதும்கூட செம மவுசு. தினசரி எகிறும் பெட்ரோல் விலைக்கு எல்பிஜி, ஓர் அற்புதமான வரம். இதன் மைலேஜும் பெட்ரோலுக்கு இணையாக இருந்ததாகச் சொல்கிறார்கள். எனவே, மார்க்கெட்டில் இயான் எல்பிஜி வந்தால் விட வேண்டாம்.
இதன் இடவசதியும் ஓகே! சின்ன கார் என்றாலும் 2,380 மிமீ வீல்பேஸ், 4 பேருக்குப் போதுமான இடவசதியை அளிக்கும்.
என்ன ப்ளஸ்… என்ன மைனஸ்?
ஹூண்டாய் கார்களில் பெரிய குறையாக ஆரம்பத்தில் இருந்தே சொல்லப்படுவது, அதன் ஸ்டீயரிங் ஃபீட்பேக்தான். நெடுஞ்சாலைகளில் இதன் எடை குறைந்த ஸ்டீயரிங், வேகங்களில் கொஞ்சம் அலைபாய்ந்து பயத்தை வரவழைக்கும். இயானின் இன்னொரு குறை – இது ஒரு அண்டர்வெயிட் கார். இதன் எடை சுமார் 800 கிலோ என்பதால், பாடி ரோலும் அலைபாயலும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். நீங்கள் அடிக்கடி நெடுஞ்சாலைப் பயணம் மேற்கொள்கிறவர் என்றால், இயான் வாங்கும்போது கவனமாக இருங்கள். ஆனால், டாப் ஸ்பீடு 130 கிமீ வரையெல்லாம் ரெவ் செய்யலாம் என்பது சூப்பர். க்ராஷ் டெஸ்ட்டில் இது 1 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய கார் என்பதை நினைவில் கொள்க!
இதன் NVH (Noise Vibration Harshness) லெவலும் கொஞ்சம் சுமாராகவே இருக்கும். அதிக வேகங்களில் இதன் இன்ஜின் சத்தம் கேபினுக்குள் கொஞ்சம் அதிகமாகவே கேட்கும். அதேபோல், மாருதி ஆல்ட்டோ கே10 உடன் ஒப்பிடும்போது, இதன் இன்ஜின் ஸ்மூத்னெஸ் போட்டி போட முடியவில்லை. இதன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் கொஞ்சம் ஸ்மூத்னெஸ்ஸைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்தான் வேண்டும் என்பவர்கள், இயானை எதிர்பார்க்க முடியாது. இதன் கி.கிளியரன்ஸ் 170 மிமீ என்பதால், 4 பேர் எடையைத் தாங்கிக் கொண்டு ஸ்பீடு பிரேக்கர்களில் எளிதாகப் போகலாம் இந்த இயானில்.
என்ன கவனிக்கணும்?
இன்டீரியர் மற்றும் ஃபிட் அண்ட் ஃபினிஷ் குவாலிட்டியில் நன்றாகவே இருந்தது இயான். இதன் க்ளட்ச் வியர் தேய்மானம்தான் பெரிதாகச் சொல்லப்படும் குறை. 50,000 கிமீ ஓடிவிட்டது என்றால், க்ளட்ச் வியரில் கவனம் தேவை. ஸ்டீயரிங் ஃபீட்பேக் மற்றும் சஸ்பென்ஷன் செட்டிங்கிலும் கவனம்! பவர் ஸ்டீயரிங்கின் பம்ப் ஃபெயிலியலர் ஆவதாகப் பல வாடிக்கையாளர்கள் குறை சொல்லியிருக்கிறார்கள். இயானில் ப்ளஸ், இதன் உதிரிபாகங்கள் விலை மலிவாகவே கிடைக்கும். ஆனால், இந்த ஸ்டீயரிங் பம்ப்பின் விலை மட்டும் கொஞ்சம் பர்ஸைப் பதம் பார்க்கும்.
பின் பக்க சஸ்பென்ஷன் வியரில் கண் வையுங்கள். கொஞ்சம் மோசமான சாலைகளில் காரை ஓட்டிப் பார்த்தால்… உங்களுக்கே ஒரு ஐடியா கிடைக்கும்.
பட்ஜெட் வாடிக்கையாளர்கள் இப்போதும் பழைய கார் மார்க்கெட்டில் இயானைத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் – இதன் பராமரிப்புச் செலவு. 10,000 கிமீ–க்கு 3,000 ரூபாய்தான் செலவழிவதாகச் சொல்கிறார்கள் சிலர்.
‘வ்வ்ர்ர்ரூம்’னு பறக்கத் தேவையில்லை; பர்ஸில் பணம் காலியாகக் கூடாது; நல்ல மைலேஜ் வேணும்; சிட்டிக்குள் புகுந்து புறப்பட்டு வர எக்கனாமிக்கலாக ஒரு குட்டிக் கார் வேணும் என்பவர்கள், இயானை 2.0 லட்சம் பட்ஜெட்டில் கண்ணை மூடிக் கொண்டு வாங்கலாம்.