புவனேஸ்வர்: ஒடிசாவை சேர்ந்த 58 வயதான எம்எல்ஏ அங்கத கன்ஹர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிறார்.
ஒடிசாவில் கடந்த 29-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 5.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். அவர்களோடு புல்பானி தொகுதி பிஜு ஜனதா தளம் எம்எல்ஏ அங்கத கன்ஹரும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி வருகிறார்.
கந்தமால் மாவட்டம், பிதாபரி கிராமத்தில் அமைந்துள்ள ருஜன்ஜி உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியரோடு இணைந்து எம்எல்ஏவும் நாள்தோறும் பொதுத்தேர்வில் பங்கேற்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
“கடந்த 1978-ம் ஆண்டில் நான் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருக்க வேண்டும். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அப்போது பொதுத்தேர்வை எழுத முடியவில்லை. அதன்பிறகு கடந்த 1984-ம் ஆண்டில் பஞ்சாயத்து அரசியலில் கால் பதித்தேன். இப்போது எம்எல்ஏவாக மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன்.
கல்வி கற்க வயது தடையில்லை. வேலைக்காக மட்டுமல்ல, அறிவை வளர்க்கவும் கல்வி அவசியமாகிறது. எனது சக நண்பரும் கந்தமால் பஞ்சாயத்து தலைவருமான சுதர்சனும் என்னோடு சேர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகிறார். 24 வயதாகும் எனது ஓட்டுநர் பிதாபாசாவும் தேர்வு எழுதுகிறார்”இவ்வாறு எம்எல்ஏ தெரிவித்தார்.
தேர்வு மையம் அமைந்துள்ள ருஜன்ஜி உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை அர்ச்சனா கூறும்போது, “எம்எல்ஏவுக்காக சிறப்பு வசதிகளை செய்து கொடுக்கவில்லை. தேர்வுக்கு முன்பாக அவரும் பரிசோதிக்கப்படுகிறார். சாமானிய தனித்தேர்வரை போன்றே அவர் தேர்வு எழுதி வருகிறார்” என்று தெரிவித்தார்.