வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
விசென்சா : இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இத்தாலிய சிறுமி ஒருவரின் 13வது பிறந்தநாள் கேக்கை அமெரிக்க வீரர்கள் திருடிச் சென்றுள்ளனர். கடந்த ஏப்.,28 அன்று 90வது பிறந்த நாள் கொண்டாடிய அவருக்கு அமெரிக்க ராணுவத்தினர் கேக் வழங்கி தங்களால் ஏற்பட்ட வடுவை மறக்கச் செய்தனர்.
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க வீரர்கள் இத்தாலியின் விசென்சாவில் ஜெர்மன் வீரர்களுடன் சண்டையிட்டனர். அதில் அமெரிக்க டாங்கிகள் அழிக்கப்பட்டு 19 வீரர்கள் கொல்லப்பட்டனர். உயிர் பிழைத்தவர்கள் விசென்சாவில் உள்ள உள்ளூர் மக்களிடம் உதவி பெற்று தப்பித்தனர். அந்த சமயத்தில் அங்கு வசித்த மெரி மியான் என்பவருக்கு 13வது பிறந்த நாள். அதற்காக அவரது தாயார் ஒரு கேக்கை தயாரித்திருந்தார். ஜன்னல் ஓரம் வைக்கப்பட்டிருந்த கேக்கை பசியில் இருந்த அமெரிக்க வீரர்கள் சிலர் திருடி சென்றுள்ளனர். இதனால் அச்சிறுமி வருத்தமுற்றார். இச்செய்தி பத்திரிகை மூலமாக சம்பந்தப்பட்ட அமெரிக்காவின் 88வது காலாட்படைக்கு தெரிய வந்தது.
77 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தங்களால் தவறாக சென்ற விஷயத்தை அமெரிக்க ராணுவம் சரிசெய்ய முயன்றுள்ளது. சிறுமியாக இருந்தவருக்கு தற்போது 90 வயது ஆகிறது. கடந்த ஏப்.,28 அன்று தான் 90வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் அமெரிக்கா ராணுவத்தினர் புதிய கேக் ஒன்றை அவருக்கு வழங்கி பாடல்களை பாடி வாழ்த்து தெரிவித்தனர்.

இத்தாலியின் விசென்சா நகரில் நடந்த இந்நிகழ்வில் மேரி மியோனுக்கு கேக் வழங்கப்பட்டது. அமெரிக்க ராணுவத்தால் பகிரப்பட்ட வீடியோவில், அதிகாரிகள் அவருக்கு பிறந்தநாள் பாடலைப் பாடி பரிசை வழங்கியபோது அவர் கண்ணீர் சிந்தினார். மியோனுக்குச் சொந்தமானது இறுதியில் அவளிடம் திரும்ப கிடைத்துள்ளது என ராணுவத்தினர் கூறினர். தன்னை நினைவு கூர்ந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். தன்னால் மறக்க முடியாத அற்புதமான நாள் இது என தெரிவித்தார். குடும்பத்தினர் அனைவருடனும் அந்த இனிப்பை சாப்பிடுவோம் என மியோன் கூறினார்.
Advertisement