விழுப்புரம்:
விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுமக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளரும், மயிலம் சட்டமன்ற உறுப்பினருமான வண்டிமேடு சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலசக்தி, மாவட்ட தலைவர்கள் தங்கஜோதி, புகழேந்தி, பாவாடைராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பாலசக்தி அனைவரையும் வரவேற்று பேசினார். பா.ம.க. மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே. மணி, அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் பேராசிரியர் தீரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்று பேசியதாவது:
ஆளுநரும், தமிழக அரசும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டவர்களே. அவர்கள் ரெயில் தண்டவாளம் போல இணைந்து செயல்பட வேண்டும் அப்போதுதான் தமிழகத்துக்கு முன்னேற்றம் கிடைக்கும். இவர்களுக்குள் பிரச்சினை வரக்கூடாது. யார் பெரியவர் என்ற ஈகோ இருக்கக் கூடாது. அதேநேரத்தில் ஆளுநர் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் மின்வெட்டு பொதுமக்களையும் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதித்துள்ளது. இந்திய அளவில் நிலக்கரி தட்டுப்பாடு இருந்தாலும் இதுகுறித்து முன்னரே கணித்து செயல்பட தமிழக அரசு தவறி விட்டது. ஆகையால் இதன் பிறகும் தாமதிக்காமல் மின்வெட்டை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள புதிய மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் மதுவிலக்கு 70 சதவீதம் பிரச்சினைகளுக்கு காரணமாகின்றன. ஆகவே மதுவிலக்கை முழுமையாக செயல்படுத்த செயல் திட்டம் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த தலைமுறை பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும். குறிப்பாக தற்போது பள்ளி மாணவர்கள் கூட மது அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில அரசை மத்திய அரசு விலை குறைக்க சொல்வது ஏற்புடையது அல்ல.
ஏனெனில் மத்திய அரசு தான் பெட்ரோல் டீசல் மீது அதிக வரி விதிக்கிறது. தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா முழுமையாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் தற்போது காவல்நிலைய மரணங்கள் ஏற்படுவது வேதனை அளிக்கிறது. இதனை தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தின் முடிவில் பாமக நகர செயலாளரும் கவுன்சிலருமான இளந்திரையன் நன்றி கூறினார்.
இதையும் படியுங்கள்…ஒரே நேரத்தில் 10 நாட்களுக்கான வருகையை பதிவு செய்த அரசு பெண் மருத்துவர்