மும்பை,
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமனம் செய்யப்பட்டார். ஆனால், சென்னை அணி தொடரின் துவக்கத்தில் இருந்து கடும் தடுமாற்றம் கண்டது. முதல் 8 போட்டிகளில் 6-ல் தோல்வி, 2-ல் மட்டுமே வெற்றி அடைந்தது.
சென்னை அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த நிலையில், திடீரெனெ ஜடேஜா கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதனால், மீண்டும் கேப்டனாகும் சூழல், டோனிக்கு ஏற்பட்டது. நேற்று ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி அசத்தல் வெற்றியை பெற்றது. போட்டிக்குப் பிறகு பேசிய டோனி, கேப்டன் விவகாரம் குறித்து மனம் திறந்தார். டோனி கூறியதாவது:
கடந்த சீசனிலேயே ஜடேஜா இந்த ஆண்டு கேப்டனாக இருப்பார் என்று எனக்கு தெரியும். முதல் இரண்டு ஆட்டங்களுக்கு, நான் அவருடைய கேப்டன்சியை மேற்பார்வையிட்டேன், பின்னர் அவரை அனுமதித்தேன். அவர் தனது சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும் மற்றும் அவற்றுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். நீங்கள் அவர்களுக்கு எல்லாவற்றையும் ஸ்பூனில் எடுத்து ஊட்ட முடியாது. நீங்கள் கேப்டனாக ஆனவுடன், நிறைய விஷயங்கள் உங்களை அழுத்தும். இது அந்த வீரரின் செயல்திறனைப் பாதிக்கலாம் என்று கருதுகிறேன்.