அமைச்சரவை மாற்றம்: அமித் ஷாவுடன் விவாதிக்கும் முதல்வர்!

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தில்
அமைச்சரவை மாற்றம்
அல்லது விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று
பாஜக
எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், ஐந்து மாநில தேர்தல் நடைபெற்றதால், அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போனது. தற்போது, தேர்தல் முடிந்து 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து, அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

அம்மாநிலத்தை பொறுத்தவரை அமைச்சரவையில் ஐந்து இடங்கள் காலியாக உள்ளன. இதில் 4 இடங்கள் கடந்த ஓராண்டாகவும், ஒப்பந்தகாரர் தற்கொலை விவகாரத்தில் அமைச்சராக இருந்த ஈசுவரப்பா ராஜினாமா செய்ததால் மற்றுமொரு இடமும் காலியாக உள்ளது. இதனிடையே, அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை கவனத்தில் கொண்டு அமைச்சரவையை மாற்றியமைக்க பாஜக மேலிடமும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மேலிடத்தில் இருந்து இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர்
அமித் ஷா
இன்று இரவு கர்நாடக மாநிலம் செல்லவுள்ளார். பெங்களூருவில் நாளை நடைபெறவுள்ள பல்வேறு நகிழச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். நாளை காலை 9.55 மணியளவில் பெங்களூருவில் உள்ள பசவேசுவரா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளாா். மதியம் 12 மணியளவில் சாத்தனூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.

அதன்பிறகு, மதியம் 1.30 மணியளவில் முதல்வர் பசவராஜ் வீட்டில் நடைபெறும் விருந்தில் கலந்து கொள்ளவுள்ளார். மதியம் 2.30 மணியளவில் மல்லேசுவரத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை மாலை 5.30 மணியளவில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவில் அமித்ஷா தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளார்.

அமித் ஷாவின் இந்த பயணத்தின் போது, கர்நாடக அமைச்சரவை மாற்றம் குறித்து அவர் முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் ஆலோசிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலுக்கு ஒராண்டுக்கும் குறைவாக உள்ளதாலும், பல புதிய முகங்களுக்கு தலைமைப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்பதாலும், அம்மாநில அரசாங்கம் ஊழல் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதாலும் அமித் ஷாவின் பெங்களூரு வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

“தலைமை மாற்றம்தான் பாஜகவின் பலம், புது முகங்களை அறிமுகப்படுத்தி டெல்லி மற்றும் குஜராத்தில் மாநகராட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய முகங்களை அறிமுகப்படுத்தினோம்.” என்று சுட்டிக்காட்டி பாஜக தேசிய பொது செயலாளர் பி.எல்.சந்தோஷ் மைசூருவில் பேசியது கர்நாடக பாஜகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், “நாம் எங்கு பலவீனமாக இருக்கிறோமோ, அங்கெல்லாம் மாற்றம் தவிர்க்க முடியாதது. பலவீனமான தலைவர்களை கட்சி ஊக்குவிக்காது. சொந்தமாக கர்நாடக மாடல் எங்களிடம் உள்ளது. எனவே, குஜராத், பஞ்சாப் மாடல் இங்கு இருக்காது.” என்று அதே தொனியில் பாஜக தேசிய பொது செயலாளர் சிடி ரவியும் பேசியுள்ளது கவனிக்கத்தக்கது. இதனிடையே, 8 முதல் 10 புதிய முகங்கள் அமைச்சரவையில் இடம்பெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்சி மற்றும் கட்சி இரண்டிலும் மாற்றம் ஏற்படாவிட்டால், மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைப்பது பாஜகவுக்கு கடினமாக இருக்கும் என்று பாஜகவின் உட்கட்சி கணித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, அமித் ஷாவின் வருகை மிகப்பெரிய மாற்றத்தை அம்மாநில பாஜகவில் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த மாதம் பாஜக தேசிய தலைவர்
கர்நாடகா
வந்து சென்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்
பசவராஜ் பொம்மை
, “அமைச்சரவை விரிவாக்கம் குறித்து எங்கள் கட்சியின் தேசிய தலைவா் ஜே.பி.நட்டாவுடன் ஆலோசனை நடத்தினேன். அவர், டெல்லியில் இதுபற்றி ஒரு சிறப்பு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்திய பிறகு எனக்கு அழைப்பு விடுப்பதாக கூறினார். அழைப்பு வந்த பின்னர் டெல்லி செல்லவுள்ளேன். அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறதா அல்லது மாற்றி அமைக்கப்படுகிறதா என்பது டெல்லியில் தான் தெரியவரும்.” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.